Fastag | ஏப்ரல் 1 முதல் டபுள் ஷாக்… ஃபாஸ்டேக், சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்வு

சென்னை:

தமிழ்நாட்டில் உள்ள குறிப்பிட்ட சில சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 1-ந்தேதியும், மீதியுள்ள மற்ற சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந்தேதியும் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் திண்டிவனம், ஆத்தூர், கணியூர், கப்பலூர், கீழ் குப்பம், கிருஷ்ணகிரி, மாத்தூர், நாங்குநேரி, ஸ்ரீபெரும்புதூர், பரனூர், திருப்பாச்சேத்தி, வானகரம், விராலிமலை, வாணியம்பாடி உள்பட 66 சுங்கச்சாவடிகளில் 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது.

இதனால் தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தை விட கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரையும், லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்களுக்கு ரூ.50 முதல் ரூ.200 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளது. இதே போல் மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.300 முதல் ரூ.350 வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் விலையை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரத்து 75 ஆக உயர்த்தவும் முடிவு செய்துள்ளனர்.

இந்த விலை உயர்வுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில் தற்போது சுங்க கட்டண உயர்வால் மேலும் கூடுதல் சுமை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

இது குறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ் கூறியதாவது:-

சுங்கச்சாவடி கட்டண உயர்வால் ஒவ்வொரு லாரிக்கும் தற்போது கூடுதல் செலவு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. நகரத்தையொட்டி உள்ள 13 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சுங்க சாவடி அமைக்க கூடாது என்ற விதி உள்ளது. அதையும் மீறி சேலம் கருப்பூரில் அமைக்கப்பட்ட டோல்கேட்டை அகற்ற பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் லாரி உரிமையாளர்கள் உள்பட பலரும் போராட்டம் நடத்திய நிலையில் அதிகாரிகளும் வந்து பார்வையிட்டு சென்றார்கள். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் தமிழகத்தில் காலாவதியான 36 சுங்க சாவடிகளை அகற்றினாலே ஓரளவுக்கு செலவு குறைந்து விடும். அதையும் இதுவரை அகற்றவில்லை. மேலும் சொந்த உபயோக்கத்துக்கு பயன்படுத்தும் கார்களுக்கு வழங்கப்படுவது போல் லாரிகளுக்கும் வருடாந்திர சுங்க சாவடி பாஸ் வழங்கினால் அதை வாங்கவும் தயாராக உள்ளோம். சுங்க கட்டண உயர்வை உயர்த்தக்கூடாது என்று பலமுறை நாங்கள் வலியுறுத்தியும், தொடர்ந்து கட்டணத்தை உயர்த்தி வருகிறார்கள். இதனால் ஒவ்வொரு லாரிக்கும் கூடுதல் செலவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுங்க சாவடி கட்டண உயர்வு காரணமாக தினசரி தேசிய நெஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், பஸ் மற்றும் சரக்கு வாகன உரிமையாளர்கள் மீது கூடுதல் பொருளாதார சுமை ஏற்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு காரணமாக பொருட்களின் விலையும் உயரும் நிலை உருவாகி உள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் தற்போது சுங்க கட்டண உயர்வு என்பது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Source link