புதுடில்லி: மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை, டில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நிராகரித்தார்.
டில்லி அரசு 2021ம் ஆண்டு அறிவித்த புதிய மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ஏற்கனவே உள்ள மதுபானக் கொள்கையே அமலில் இருக்கும் என அறிவித்த அப்போதைய துணைநிலை கவர்னர் சக்சேனா, இந்த விவகாரத்தை விசாரிக்க சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டார்.
வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை, முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட 21 பேரை கைது செய்தனர். சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில், கெஜ்ரிவால் உட்பட 21 பேரையும் விடுதலை செய்து விசாரணை நீதிமன்றம் பிப்ரவரி 27ம் தேதி உத்தரவிட்டது.
விசாரணை
நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ., மேல்முறையீடு செய்தது. இந்த மனு, நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா முன்னிலையில், 9ம் தேதி விசாரணைக்கு வந்தது. அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட 21 பேரும் சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ள மனு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 16ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட 21 பேரும், ‘மதுபானக் கொள்கை வழக்கில் சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு விசாரணையை நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மாவிடம் இருந்து, வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும்’ என, டில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம், 11ம் தேதி மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை நிராகரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா, “சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, நீதிமன்றப் பணிப் பகிர்வுப் பட்டியல் அடிப்படையில் நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே நிர்வாக ரீதியாக வழக்கு விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.
ஒரு வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகிக்கொள்வது குறித்து சம்பந்தப்பட்ட நீதிபதிதான் முடிவு எடுக்க வேண்டும்,”என, கூறியுள்ளார். சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ள தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீண்டும் நாளை விசாரணைக்கு வருகிறது.
