– நமது சிறப்பு நிருபர் -தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் தேதி

– நமது சிறப்பு நிருபர் –

தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலங்களில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. கூட்டணி அமைப்பது, வேட்பாளர் தேர்வு என, கட்சிகளின் நடவடிக்கைகள் சுறுசுறுப்பு அடைந்துள்ளன.

கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய மாநிலங்களில், ஏப்., 9; தமிழகத்தில் ஏப்., 23; மேற்கு வங்கத்தில் ஏப்., 23 மற்றும் 29ல் சட்டசபை தேர்தல் நடக்கிறது. வடகிழக்கு மாநிலமான அசாமில் பா.ஜ.,வும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பா.ஜ., கூட்டணி ஆட்சியும் நடக்கிறது. தமிழகத்தில் தி.மு.க., கேரளாவில் இடதுசாரி கூட்டணி, மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அம்மாநிலங்களின் கள நிலவரம்:

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சட்டசபை பதவிக்காலம், மே 23ல் முடிவடைகிறது. மொத்தமுள்ள, 126 தொகுதிகளில், 64ல் வென்றால் ஆட்சி அமைக்கலாம். பா.ஜ., கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதில் தீவிரமாக உள்ளது. அதிகாரத்தை நிலைநாட்ட எதிர்க்கட்சியான காங்., தீவிரமாக பணியாற்றுகிறது.

பாடகர் ஜூபின் கார்க்கின் கலை பாரம்பரியம் சார்ந்த விவகாரத்தை மையமாக வைத்து, காங்கிரசைச் சேர்ந்த கவுரவ் கோகோய்க்கு எதிராக முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி, இன அடையாளம், அத்துமீறிய ஊடுருவல், வெள்ள பாதிப்பு போன்றவை அசாமின் முக்கிய பிரச்னைகளாக உள்ளன.

மேற்கு வங்கம்

மேற்கு வங்கம் மொத்தம், 294 தொகுதிகளை உடைய மேற்கு வங்க சட்டசபையின் பதவிக்காலம், மே 7ல் நிறைவடைகிறது. திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி, தொடர்ந்து, 15 ஆண்டுகளாக முதல்வராக உள்ளார்.

அவரை வீழ்த்த பா.ஜ., முனைப்புடன் உள்ளது. இந்த தேர்தலில் முதன்முறையாக, ஆளும் திரிணமுல் காங்., – பா.ஜ., – காங்., இடதுசாரி இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.கடந்த தேர்தலில், பா.ஜ., 77 இடங்களை மட்டுமே வென்றது. திரிணமுல் காங்., 215 இடங்களில் வென்று ஆட்சி அமைத்தது.

இங்கு, 2024 லோக்சபா தேர்தலில், 42 தொகுதிகளில் திரிணமுல் காங்., 29; பா.ஜ., 12 தொகுதிகளில் வென்றன. சட்டம் – ஒழுங்கு சீர்கேடு, எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி விவகாரம், சட்ட விரோத ஊடுருவல் போன்றவை முக்கிய பிரச்னைகளாக இருக்கின்றன.

தமிழகம்

தமிழகத்தில் மொத்தம், 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தற்போதுள்ள சட்டசபையின் பதவிக்காலம், மே 10ல் நிறைவடைகிறது. பல ஆண்டுகளாக, தமிழகத்தில் தி.மு.க., – அ.தி.மு.க., இடையே கடும் போட்டி நிலவுகிறது. நடிகர் விஜய் துவக்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக தேர்தலை சந்திக்க இருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., கூட்டணி, முன்னாள் முதல்வர் பழனிசாமி த லைமையில் அ.தி.மு.க ., கூட்டணி தேர்தலை சந்திக்கின்றன.த.வெ.க., தனித்து போட்டியிடுகிறது. இதற்கிடையே, த.வெ.க.,வை, அ.தி.மு.க., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது.ஹிந்தி திணிப்பு, தேசிய கல்விக் கொள்கை, ஊழல் ஒழிப்பு, வாரிசு அரசியல் எதிர்ப்பு போன்றவை இந்த தேர்தல் பிரசாரத்தின் முக்கிய அம்சங்களாக உள்ளன.

கேரளா

கேரளா மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கும் கேரளாவில், சட்டசபையின் பதவிக்காலம் மே 23ல் முடிவடைகிறது.

மொத்தம் 140 தொகுதிகள் உள்ளன. இங்கு, ஆளும் கூட்டணிக்கும், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.தொடர்ச்சியாக இரு முறை வெற்றி பெற்ற முதல்வர் பினராயி விஜயன், ‘நவ கேரளம்’ குறித்த தொலைநோக்கு பார்வையை முன்வைத்து வருகிறார்.

அவருக்கு போட்டியாக, ஐக்கிய ஜனநாயக முன்னணி, ‘புது யுக யாத்திரை’யை முன்னெடுத்துள்ளது. கேரளாவில், பா.ஜ.,வும் வளர்ந்து வருகிறது. அக்கட்சியின் மாநில தலைவர் ராஜிவ் சந்திரசேகர், ‘மாறாதது இனி மாறும்’ என்ற முழக்கத்தை வலியுறுத்தி வருகிறார்.

புதுச்சேரி

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் என நான்கு பகுதிகளை உடைய புதுச்சேரியில், 30 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் ஜூன் 15ல் முடிவடைகிறது.

பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், இங்குள்ள ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவு. எனவே, வெற்றி தோல்விகள் மிகச்சிறிய ஓட்டு வித்தியாசங்களிலேயே தீர்மானிக்கப்படுகின்றன.

இங்கு, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்., – பா.ஜ., கூட்டணி மற்றும் தி.மு.க., – காங்., கூட்டணி இடையே நேரடி மோதல் நிலவுகிறது. ஆட்சியை தக்கவைக்க பா.ஜ., கூட்டணி போராடும் சூழலில், அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் தி.மு.க., கூட்டணியும் மல்லுக் கட்டுகிறது.

மாநில அந்தஸ்து, நிதி பற்றாக்குறை, வேலைவாய்ப்பு உட்பட பல்வேறு விஷயங்கள் இந்த தேர்தல் பிரசாரத்தில் எதிரொலிக்கும்.

Source link