சென்னை,
எஸ்டிபிஐ கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
அமெரிக்காவுடன் மோடி அரசு மேற்கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தத்தை எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் துணைத் தலைவர் சீதாராம் கொய்வால் வன்மையாகக் கண்டித்துள்ளார். இது இந்தியாவின் இறையாண்மை மற்றும் பொருளாதார சுதந்திரத்தை சீர்குலைக்கும் ஒரு அவமானகரமான சரணாகதி என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய விவசாயிகளைப் பெருமளவில் பாதிக்கும் இந்த ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, டிரம்பால் அவசரகதியாக அறிவிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், அமெரிக்காவின் அழுத்தத் தந்திரங்களுக்கு இந்தியா அடிபணிந்துள்ளதையே காட்டுகிறது. நாட்டு மக்களின் நன்மையை விட அமெரிக்காவின் அரசியல் திட்டங்களுக்கு இணங்குவதற்காக, இந்தியா தன் சொந்த முடிவு எடுக்கும் உரிமையை (மூலோபாய சுயாட்சி) துறந்துள்ளது.
குறிப்பாக, சந்தை விலையை விட பேரலுக்கு 40 முதல் 50 டாலர் வரை குறைந்த விலையில் கிடைத்து வந்த ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்த ஒப்புக்கொண்டதன் மூலம், மோடி அரசு இந்திய மக்கள் மீது கடும் பணவீக்கத்தைத் திணிக்கிறது. மலிவான ரஷ்ய எண்ணெய்க்குப் பதிலாக அதிக விலையுள்ள அமெரிக்க எண்ணெய்க்கு (அல்லது வெனிசுலா எண்ணெய்க்கு) மாறுவது, இந்தியாவின் இறக்குமதிச் சுமையை ஆண்டுதோறும் பில்லியன் கணக்கில் உயர்த்தும்.
மேலும், அடுத்த சில ஆண்டுகளில் 500 பில்லியன் டாலருக்கும் அதிகமான அமெரிக்கப் பொருட்களை வாங்க ஒப்புக்கொண்டிருப்பது இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையை அதிகரிக்கும். அமெரிக்க விவசாயச் செயலரின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுவது போல, அமெரிக்க விவசாயப் பொருட்கள் பூஜ்ஜிய சதவீத இறக்குமதி வரியுடன் இந்திய சந்தைக்குள் நுழைந்தால், அது இந்திய விவசாயத்திற்குப் பேரழிவை ஏற்படுத்தும்.
பருத்தி, பால் மற்றும் பால் பொருட்கள், பருப்பு வகைகள், சோயாபீன்ஸ், மக்காச்சோளம், பாதாம், வால்நட், பிஸ்தா போன்ற கொட்டை வகைகள் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட பழங்களை வரியின்றி இறக்குமதி செய்வது இந்திய விவசாயிகளைப் பெரும் பாதிப்புக்குள்ளாக்கும். ஏற்கனவே இடுபொருள் செலவு உயர்வு, குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்காமை மற்றும் சந்தை ஸ்திரமின்மை போன்றவற்றால் அவதிப்படும் இந்திய விவசாயிகளால், அமெரிக்காவின் அதிக மானியம் பெறும் விவசாய நிறுவனங்களுடன் போட்டியிட முடியாது.
விவசாயிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தால் திரும்பப் பெறப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் மூலம் இந்திய விவசாயத்தை மாற்றியமைக்க பாஜக அரசு மேற்கொண்ட முயற்சியை இது நினைவுபடுத்துகிறது. இத்தகைய வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் மீண்டும் அச்சட்டங்கள் மற்றொரு வடிவில் உருவெடுப்பது விவசாயிகளின் நலனில் மோடி அரசுக்கு அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது.
பால் உற்பத்தி போன்ற முக்கியமான துறைகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று தெளிவற்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டாலும், இந்திய வரி விகிதங்களை கிட்டத்தட்ட பூஜ்ஜியமாகக் குறைப்பது அமெரிக்க விவசாயப் பொருட்களின் ஊடுருவலுக்கு வழிவகுக்கும். இது உள்நாட்டுத் தொழில்களில் வேலை இழப்பை ஏற்படுத்துவதோடு, ‘மேக் இன் இந்தியா’ போன்ற தற்சார்பு முயற்சிகளையும் பலவீனப்படுத்தும். இது ஒரு சமநிலையான கூட்டாண்மை அல்ல, மாறாக ஒருதலைப்பட்சமான சலுகையாகும். இதில் இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரிகள் 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டாலும், அது முந்தைய நிலையை விட அதிகமாகும் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.
இத்தகைய வெளிப்படைத்தன்மை இல்லாத வர்த்தக ஒப்பந்தம் கவலையளிக்கிறது. எண்ணெய் இறக்குமதி மாற்றத்திற்கான காலக்கெடுக்கள், குறிப்பிட்ட பொருட்களின் பட்டியல்கள் அல்லது அமலாக்க முறைகள் குறித்த முழு விவரங்களையும் வெளியிட மோடி அரசு மறுத்து வருகிறது.
கடந்த ஆண்டு பிரதமர் மோடி டிரம்புடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தத் தவறியதால் பேச்சுவார்த்தைகள் முடங்கியதாகவும், அதன் விளைவாக வரிவிகிதங்களை இரட்டிப்பாக்கி இந்தியாவின் ஏற்றுமதியை அமெரிக்கா முடக்கிய நிலையில், தற்போது அதானி குழுமத்தின் மீதான அமெரிக்க விசாரணைகள் போன்ற வெளிப்புற அழுத்தங்கள் மற்றும் பல்வேறு அழுத்தங்களின் காரணமாகவே இந்த ஒப்பந்தம் மீண்டும் தொடங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது. இந்த ஒப்பந்தம் இந்தியாவின் நீண்டகால அணிசேராக் கொள்கையைச் சிதைப்பதோடு, ரஷ்யாவுடனான உறவைப் பாதித்து, உலக அரங்கில் இந்தியாவைத் தனிமைப்படுத்தும் அபாயத்தையும் கொண்டுள்ளது.
இத்தகைய ஒப்பந்தத்தை மேற்கொள்வதில் அரசாங்கத்தின் நோக்கம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ள எஸ்டிபிஐ கட்சி, விவசாயத்தைப் பாதிக்கும் எந்தவொரு வர்த்தக ஒப்பந்தமும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு ஜனநாயக ரீதியில் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. கார்ப்பரேட் மற்றும் வெளிநாட்டு நலன்களுக்காக விவசாய சமூகத்தின் உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் அடகு வைப்பது ஒரு துரோகமாகும். இதற்காக அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் மற்றும் ஒப்பந்தத்தின் முழு விவரங்களையும் பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் எஸ்டிபிஐ தேசிய துணைத் தலைவர் சீதாராம் கொய்வால் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
