காஸ் தட்டுப்பாடு பிரச்னை: மாற்று வழி காண்பது அவசியம்!

‘வளைகுடா நாடான ஈரான், அணு ஆயுதம் தயாரிப்பதை நிறுத்த வேண்டும், அணு ஆயுதம் தயாரிக்க தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதை நிறுத்த வேண்டும், நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகள் தயாரிப்பதையும் நிறுத்த வேண்டும்’ என்று வலியுறுத்திய, அமெரிக்க அதிபர் டிரம்ப், அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அதற்கு ஈரான் உடன்படாததால், அந்நாட்டால் தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி, அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த இரண்டு வாரங்களாக தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த வளைகுடா போரால், உலகின், 20 சதவீத எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வினியோகம் தடைப்பட்டுள்ளது. நம் நாட்டில், வர்த்தக காஸ் சிலிண்டர் வினியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஹோட்டல்கள், டீக்கடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து வாகனங்களும் இயங்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனால், அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்திற்குள் எரிவாயு கொண்டு வரப்பட்டுள்ளது. அத்துடன், வீட்டு சமையல் பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் வினியோகத்திற்கு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முக்கியத்துவம் தர வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், சமையல் காஸ் புக்கிங் விஷயத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

உலகில் அதிகளவில் கச்சா எண்ணெய் பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றான இந்தியா, கச்சா எண்ணெய் தேவையில், 88 சதவீதம் அளவுக்கு இறக்குமதி செய்கிறது. குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து, அதிக அளவில் இறக்குமதி செய்கிறது. அதேபோல, திரவ எரிவாயு இறக்குமதிக்கும் சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளையே பெருமளவு நம்பியிருக்கிறது. அதுவே, தற்போதைய காஸ் தட்டுப்பாடு பிரச்னைக்கு காரணம்.

அதனால், உள்நாட்டில் சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிப்பது உட்பட பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. இருப்பினும், பல பகுதிகளில், காஸ் சிலிண்டர்களை அதிக விலைக்கு விற்பது நடக்கிறது.

காஸ் புக்கிங் செய்தவர்களுக்கு சிலிண்டர்களை வினியோகம் செய்யாமல், கள்ளச்சந்தையில் காஸ் ஏஜன்சிகள் விற்று வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

மேலும், ஈரானுக்கு எதிரான வளைகுடா போர் எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் என்பதை, தற்போதைய சூழ்நிலையில் யாராலும் கணிக்க முடியவில்லை. ஏனெனில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பதிலடியாக, ஈரானும் தாக்குதல் நடத்தி வருவதே காரணம்.

அதனால், தற்போதைய காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்னையை சமாளிக்க, நுகர்வோர் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டியது அவசியம். வீடுகளில் காஸ் பயன்பாட்டை குறைக்க வேண்டும். குறைவான எரிபொருள் பயன்பாட்டில், சமையல் செய்ய முற்பட வேண்டும்.

மின்சார அடுப்புகள் பயன்பாட்டை அதிகரிக்கலாம். தட்டுப்பாடு வதந்தியால், பொதுமக்கள் காஸ் வேண்டி அதிக அளவில் புக்கிங் செய்து வருவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதனால், வதந்திகளை நம்பி, மக்கள் பதற்றம் அடைவதை முதலில் தவிர்க்க வேண்டும்.

அதே நேரத்தில், தற்போதைய காஸ் தட்டுப்பாடு பிரச்னையை, மத்திய, மாநில அரசுகள் ஒரு எச்சரிக்கை மணியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மாற்று எரிசக்தி பயன்பாட்டிற்கு, மக்கள் மாறுவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். குறிப்பாக, சூரியசக்தி மின்சாரத்தை பயன்படுத்தி, சமையல் செய்வதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும்.

தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க, மழை நீர் சேகரிப்பு திட்டத்தை கட்டாயமாக்கியது போல, வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம், மேற்கூரை சூரிய சக்தி கட்டமைப்புகள் ஏற்படுத்துவதை கட்டாயமாக்கலாம். பயோ காஸ் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

தற்போதைய காஸ் பற்றாக்குறையை ஒரு சரியான பாடமாக எடுத்துக் கொண்டு, புதுப்பிக்கத்தக்க மாற்று எரிசக்தி பயன்பாட்டை பெருமளவில் அதிகரிப்பதற்கான திட்டங்களை, மத்திய அரசு வகுக்க வேண்டும். அதுவே, வருங்காலங்களில் எப்படிப்பட்ட பற்றாக்குறையை யும் சமாளிக்க உதவியாக இருக்கும்.

Source link