மவுன்ட் மவுன்கனுய்: முதல் ‘டி-20’ போட்டியில் அசத்திய தென் ஆப்ரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மவுன்ட் மவுன்கனுய் நகரில் நடந்தது.
‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த நியூசிலாந்து அணிக்கு கான்வே (1), டாம் லதாம் (7), டிம் ராபின்சன் (6), நிக் கெல்லி (2) ஏமாற்றினர். பெவன் ஜேக்கப்ஸ் (10), கேப்டன் சான்ட்னர் (15), மெக்கோன்ச்சி (15) நிலைக்கவில்லை. ஜேம்ஸ் நீஷம் (26) ஓரளவு கைகொடுத்தார். நியூசிலாந்து அணி 14.3 ஓவரில் 91 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. தென் ஆப்ரிக்கா சார்பில் மோகோனா 3 விக்கெட் கைப்பற்றினார்.
சுலப இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு டோனி டி ஜோர்ஜி (2) ஏமாற்றினார். ரூபின் ஹெர்மன் (7), ஜேசன் ஸ்மித் (10) சோபிக்கவில்லை. அறிமுக வீரர் கானர் எஸ்டர்ஹுய்சன் (45* ரன், 2X6, 2X4), டியான் பாரெஸ்டர் (16*) கைகொடுத்தனர். ஜேமிசன் பந்தை எஸ்டர்ஹுய்சன் சிக்சருக்கு அனுப்ப, தென் ஆப்ரிக்க அணி 16.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 93 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
அமெலியா அசத்தல்
மவுன்ட் மவுன்கனுயில் நடந்த முதல் ‘டி-20’ போட்டியில் நியூசிலாந்து பெண்கள் அணி (190/7), 80 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்க பெண்கள் அணியை (110/7) வீழ்த்தியது. நியூசிலாந்தின் அமெலியா கெர் (78*) அரைசதம் கடந்தார். சர்வதேச ‘டி-20’ அரங்கில் தொடர்ச்சியாக அதிக அரைசதம் விளாசிய நியூசிலாந்து பேட்டர் வரிசையில் 2வது இடத்தை (தலா 4) பிரண்டன் மெக்கலத்துடன் (59, 61, 56, 69*) பகிர்ந்து கொண்டார் அமெலியா (66, 101, 82, 78*). முதலிடத்தில் சோபி டெவின் (6 அரைசதம்) உள்ளார்.
