ஜெய்ப்பூர்: 'வரதட்சணையாக சமையல் காஸ் சிலிண்டர் கேட்டு துன்புறுத்தினால், அந்த குடும்பத்தின் காஸ் இணைப்பு

ஜெய்ப்பூர்: ‘வரதட்சணையாக சமையல் காஸ் சிலிண்டர் கேட்டு துன்புறுத்தினால், அந்த குடும்பத்தின் காஸ் இணைப்பு துண்டிக்கப்படும்’ என, ராஜஸ்தான் அரசு எச்சரித்துள்ளது.

மேற்காசியாவில் ஏற்பட்ட மோதல்களால், கச்சா எண்ணெய் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், தட்டுப்பாடு ஏற்படும் என்ற பீதியில், நாடு முழுதும் மக்கள் போட்டிப் போட்டு, சமையல் காஸ் சிலிண்டர்களை வாங்கி வருகின்றனர். பெட்ரோல் பங்க்குகளிலும் பெருமளவு கூடினர்.

இந்நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் பஜன் லால் சர்மா தலைமையிலான ராஜஸ்தான் அரசு, ‘வரதட்சணையாக சமையல் காஸ் சிலிண்டர் கேட்டு துன்புறுத்தினால், அந்தக் குடும்பத்தின் காஸ் இணைப்பு துண்டிக்கப்படும்’ என, எச்சரித்துள்ளது.

இது குறித்து, அரசு அதிகாரிகள் கூறியுள்ளதாவது: தட்டுப்பாடு ஏற்படும் என்ற அபாயத்தால், வரதட்சணையாக சமையல் காஸ் சிலிண்டர்களை கேட்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. வரதட்சணையாக சிலிண்டர் கேட்டு மருமகளை துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அந்த குடும்பத்தின் காஸ் இணைப்பு துண்டிக்கப்படும். ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு ஒரு சிலிண்டர் மட்டுமே வழங்கப்படும். இதை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணிப்பர். இதன் மூலம் காஸ் சிலிண்டர் முறைகேடாக பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கள்ளச்சந்தையில் விற்பனை!

நாட்டில் நிலவும் வணிக ரீதியிலான சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு, தற்போது திருமண வீடுகளையும், உணவகங்களையும் நிலைகுலையச் செய்துள்ளது. சத்தீஸ்கரில் ஒரு ஹோட்டல் உரிமையாளர், ‘எங்கள் ஹோட்டலில் நடக்கும் திருமணத்திற்கு பெண் வீட்டார் வரதட்சணையாக காஸ் சிலிண்டர்களை கொண்டு வந்தால் மட்டுமே சமைக்க முடியும்’ என, ஹோட்டல் முன்பு பலகை வைத்து, தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். சமையல் செய்ய திருமண மண்டப உரிமையாளர்கள் சிலிண்டர்கள் தர மறுப்பதால், நடுத்தர குடும்பங்கள் அவற்றை கள்ளச் சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Source link