மும்பை: சர்வதேச கிரிக்கெட்டில் 5 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறார் கேப்டன் சூர்யகுமார். கொளுத்தும் வெயிலுக்கு இடையே கோடை மழை போல, ‘டி-20’ உலக கோப்பை வென்று இந்திய ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்துள்ளார்.
இந்திய ‘டி-20’ அணியின் கேப்டன் சூர்யகுமார், 35. மும்பையில் பிறந்த இவர், 2010ல் முதல் தர போட்டியில் விளையாடினார். பிரிமியர் தொடரில் மும்பை அணிக்காக அசத்தினார். இருப்பினும் இந்திய அணியில் இடம் பிடிக்க நீண்ட காலம் காத்திருந்தார். சச்சினை போல 16 வயதில் அதிர்ஷ்டம் தேடி வரவில்லை. 30 வயதில் தான் இந்திய அணியில் அறிமுகமானார் சூர்யகுமார். 2021, மார்ச் 14ல் ஆமதாபாத்தில் நடந்த ‘டி-20’ போட்டியில் (எதிர், இங்கி.,) களம் கண்டார். ஆனாலும் பேட் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆரம்பமே ‘சிக்சர்’: பின் ஆமதாபாத்தில் நடந்த 4வது ‘டி-20’ போட்டியில் (எதிர் இங்கி.,) தான் சந்தித்த ஆர்ச்சரின் முதல் பந்தையே சிக்சருக்கு அனுப்பினார். 31 பந்தில் 57 ரன் விளாசி, ஆட்ட நாயகன் விருது வென்றார். 2021ல் ஒருநாள் போட்டி (773 ரன், 37 போட்டி), 2023ல் டெஸ்டில் (ஒரு போட்டி, 8 ரன், எதிர், ஆஸி.,) வாய்ப்பு பெற்றார். 30 வயதை கடந்த நிலையில், மூன்றுவித கிரிக்கெட்டிலும் அறிமுகமான முதல் இந்திய வீரரானார்.
மூன்றாவது வீரர்: ‘டி-20’ அரங்கில் அசைக்க முடியாத நட்சத்திரமாக உருவெடுத்தார். மைதானத்தின் நாலாபுறமும் பந்தை விளாச, ‘மிஸ்டர் 360 டிகிரி’ வீரர் என அழைக்கப்பட்டார். 113 ‘டி-20’ போட்டியில் 4 சதம், 25 அரைசதம் உட்பட 3272 ரன் (சராசரி 36.35, ஸ்டிரைக் ரேட் 162.94) குவித்துள்ளார். ‘டி-20’ வரலாற்றில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் ரோகித் சர்மா (4231 ரன், 159 போட்டி), கோலிக்கு (4188 ரன், 125 போட்டி) அடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.
‘உலக’ நாயகன்: கடந்த 2024ல் நடந்த ‘டி-20’ உலக கோப்பை பைனலில் (எதிர், தென் ஆ.,) மில்லர் கொடுத்த ‘கேட்ச்சை’ எல்லையில் கலக்கலாக பிடித்து, இந்தியாவின் கோப்பை கனவை நனவாக்கினார் சூர்யகுமார். இதற்கு பின் ரோகித் ஓய்வு பெற, இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். சமீபத்தில் ஆமதாபாத்தில் நடந்த ‘டி-20’ உலக கோப்பை பைனலில் இந்திய அணி, நியூசிலாந்தை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றது. இத்தொடரில் சூர்யகுமார், 9 போட்டியில் 242 ரன் குவித்தார்.
‘டி-20’ போட்டியில் அறிமுகமான அதே ஆமதாபாத் மைதானத்தில், கேப்டனாக ‘டி-20’ உலக கோப்பை வென்ற இவர், சர்வதேச கிரிக்கெட்டில் 5 ஆண்டுகளை நேற்று நிறைவு செய்தார். இவரது சாதனை பயணம் தொடரட்டும்.
5 ஆண்டுகள்
சூர்யகுமார் வெளியிட்ட செய்தியில்,”’இந்திய அணியின் ‘ஜெர்சி’ அணிய வேண்டும் என்ற எனது கனவு, ஐந்து ஆண்டுகளுக்கு முன் நனவானது. இந்த உணர்வை விவரிக்க வார்த்தைகள் இல்லை. வரும் காலங்களில் இந்திய அணிக்காக இன்னும் நிறைய இனிமையான நினைவுகளை படைக்க காத்திருக்கிறோம்,’ என தெரிவித்துள்ளார்.
