திருப்பூர்: நடப்பு பருத்தி ஆண்டில், கடந்த 13ம் தேதி வரை, 20.08 லட்சம் பேல் பஞ்சு விற்பனை செய்துள்ளதாக, சி.சி.ஐ., எனும் இந்திய பருத்தி கழகம் தெரிவித்துள்ளது.
ஒரு ஆண்டின் அக்டோபர் மாதம் முதல் அடுத்த ஆண்டின் செப்டம்பர் மாதம் வரை, பருத்தி ஆண்டாக கணக்கிடப்படுகிறது.
இந்நிலையில், சி.சி.ஐ., கடந்த பருத்தி ஆண்டில், 100 லட்சம் பேல் பருத்தி கொள்முதல் செய்து இருப்பு வைத்தது.
விலை சீராக இருந்ததால், நுாற்பாலைகள், விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்தன. இதனால், நடப்பு சீசன் துவங்கிய பின்பும், தள்ளுபடியுடன், பழைய பஞ்சு விற்பனையை சி.சி.ஐ., தொடர்ந்தது.
இதனிடையே, நடப்பு பருத்தி ஆண்டில் உள்நாட்டில் பருத்தி விளைச்சல் குறையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
பஞ்சு இறக்குமதிக்கான வரிச்சலுகையும் முடிந்து விட்டதால், நுாற்பாலைகள் தங்கள் தேவைக்கான பஞ்சு வாங்கி இருப்பு வைக்க துவங்கியுள்ளன.
இதன்படி, கடந்தாண்டு அக்., 1ல் துவங்கி கடந்த 13ம் தேதி வரை, சி.சி.ஐ., 20.08 லட்சம் பேல் பஞ்சு விற்பனை செய்துள்ளது. ஒரு பேல் என்பது 170 கிலோ.
சி.சி.ஐ., வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, கொள்முதலும், விற்பனையும் சமகாலத்தில் நடந்து வருகிறது.
இதுகுறித்து, ‘தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன்’ (டாஸ்மா) தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறுகையில், ”பஞ்சு மகசூல் குறைவு, போர் சூழல் ஆகியவற்றின் காரணமாகவும், இறக்குமதி செய்ய வாய்ப்பு குறைவு என்பதாலும், நுாற்பாலைகள், பஞ்சு கொள்முதலை முன்கூட்டியே துவக்கியுள்ளன.
”கொள்முதல் செய்துள்ள சி.சி.ஐ., இதுவரை இல்லாத அளவுக்கு, முன்கூட்டியே விற்பனையையும் துவக்கி விட்டது,” என்றார்.
