– டில்லி சிறப்பு நிருபர் -:
மேற்கு வங்கத்தில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிரான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதாடிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, தேர்தல் கமிஷன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இது தொடர்பாக, வரும் 9க்குள் பதிலளிக்கும்டி தேர்தல் கமிஷன், மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. வரும் ஏப்ரலில், தமிழகத்துடன் சேர்த்து இங்கும் சட்டசபை தேர்தல் நடக்கிறது.
முரண்பாடு
மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆர்., பணிகளை மேற்கொண்ட தேர்தல் கமிஷன், 58 லட்சம் போலி வாக்காளர்களை நீக்கி, வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது.
அதே சமயம், 1.36 கோடி வாக்காளர்களின் பெயர்களில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி விளக்கம் கேட்டுள்ளது. இதில், பெற்றோர் பெயரில் எழுத்துப் பிழை அல்லது பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையிலான வயது வித்தியாசம் போன்ற காரணங்கள் அடங்கும்.
எஸ்.ஐ.ஆர்., பணிக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் அம்மாநில அரசு மற்றும் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தரப்பில் தனித்தனியாக வழக்குகள் தொடரப்பட்டன.
முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
இதில் வாதாட, மம்தா பானர்ஜியே நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
முதன்முறை
முதல்வர் பதவியில் இருக்கும் ஒருவர், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதங்களை முன்வைப் பது இதுவே முதன்முறை. முதல்வர் மம்தாவுக்கு உதவுவதற்காக வழக்கறிஞர்கள் கோபால் சங்கரநாராயணன், ஷ்யாம் திவான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான் வாதிடுகையில், ”ஆதார் அட்டையை தேர்தல் கமிஷன் ஏற்பதில்லை. உயிரோடு இருப்பவர்களைக் கூட இறந்தவர்கள் எனக் கூறி நீக்கியுள்ளனர். ஆவணங்களில் உள்ள பெயர் பொருந்தவில்லை எனக் கூறி ஏராளமானோரை தேர்தல் கமிஷன் நீக்கி உள்ளது. தந்தை அல்லது தாத்தாவின் பெயர்களில்
சில மாற்றங்கள் இருந்தால் கூட வாக்காளரின் பெயர் நீக்கப்படுகிறது. ‘பெங்காலி’க்கும், ஆங்கிலத்துக்கும் உச்சரிப்பில் நிறைய பிரச்னைகள் உள்ளன,” என்றார்.
அதை ஆமோதித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், ”பெங்காலியில் இருந்து ஆங்கிலத்துக்கு பெயர் மாற்றம் செய்யப்படும் போது பிரச்னைகள் எழலாம். உள்ளூர் பேச்சு வழக்கு முறை உச்சரிப்பில் உள்ள மாற்றங்கள் என்பது நாடு முழுதுமே இருக்கக் கூடிய ஒன்று. இதை எப்படி சரி செய்ய போகிறீர்கள்?” என, தேர்தல் கமிஷனிடம் கேள்வி எழுப்பினார்.
இதன்பின், முதல்வர் மம்தா பானர்ஜி வாதிடுகையில், ”எஸ்.ஐ.ஆர்., மூலம் வாக்காளர்களை நீக்கும் பணிகளை மட்டும் தான் தேர்தல் கமிஷன் செய்கிறது. திருமணத்திற்கு பின், மாமியார் வீட்டிற்கு பெண் செல்கிறார். அவரிடம், புதிதாக வந்திருக்கக்கூடிய வீட்டின் முகவரியை ஏன் இன்னும் மாற்றவில்லை எனக் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். வேலைக்காக சென்ற வாக்காளர்களின் பெயர்களும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
”இந்த விவகாரத்தில் மேற்கு வங்கம் மட்டும் ஏன் குறிவைக்கப்படுகிறது? இதே அளவுகோல் ஏன் அசாமில் பயன்படுத்தப்படவில்லை? நாங்கள் எங்குமே நீதியைப் பெற முடியவில்லை. தேர்தல் கமிஷனுக்கு ஆறு கடிதங்கள் எழுதியும் பலனில்லை. வாதாட வாய்ப்பு அளித்த அமர்வுக்கு நன்றி. ஜனநாயகத்தை இந்த நீதிமன்றம் தான் காப்பாற்ற வேண்டும்,” என்றார்.
தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் திவேதி கூறுகையில், ”எஸ்.ஐ.ஆர்., பணிக்கு மேற்கு வங்க அரசு போதிய ஒத்துழைப்பை வழங்கவில்லை. அங்கன்வாடி ஊழியர்களையே பணிக்கு அனுப்பியுள்ளது,” என்றார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், ‘உண்மையான வாக்காளர்கள் எக்காரணம் கொண்டும் பட்டியலில் இருந்து விடுபடக் கூடாது’ எனக் குறிப்பிட்டனர். மேலும் இந்த மனு குறித்து, வரும் 9க்குள் பதிலளிக்கும்படி தேர்தல் கமிஷன், மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள், அன்றைய தினத்துக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.
