சென்னை: 'சென்னையில் நடந்த 49வது புத்தக கண்காட்சியில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவு பிறப்பித்த

சென்னை: ‘சென்னையில் நடந்த 49வது புத்தக கண்காட்சியில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவு பிறப்பித்த நீதிபதியை அவமதிக்கும் வகையில் புத்தகம் விற்கப்படவில்லை’ என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக காவல் துறை தாக்கல் செய்த அறிக்கையை ஏற்று, வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

‘திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஜி.ஆர்.சு வாமிநாதனை அவமதிக்கும் வகையிலான புத்தகத்தை பறிமுதல் செய்வதோடு, புத்தகம் விற்பனைக்கு வரவில்லை என்பதை, காவல் துறை உறுதி செய்ய வேண்டும். புத்தக பதிப்பாளர் மீது, தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்கிறோம்’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், கீழைக்காற்று பதிப்பக நிர்வாகிகளுக்கு, ‘சம்மன்’ அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

அவர்களின் எழுத்துப்பூர்வமான விளக்கத்தில், சர்ச்சைக்குரிய, அந்தப் புத்தகம் கண்காட்சியில் வெளியிடப்படவோ அல்லது விற்பனை செய்யப்படவோ இல்லை என உறுதி அளித்தனர்.

எதிர்காலத்தில் நீதிபதி குறித்து அவதுாறு பரப்பும் வகையிலான புத்தகங்கள், ஏதேனும் புத்தக காட்சியிலோ அல்லது மின்னணு ஊடகங்கள் வாயிலாக விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், உடனே பறிமுதல் செய்யப்பட்டு, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கறிஞர் நவீன் பிரசாத் வழக்கு மற்றும் தாமாக முன்வந்து எடுத்த அவமதிப்பு வழக்கு ஆகியவற்றை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Source link