நேபாளத்தில் வேன் கவிழ்ந்து தமிழர்கள் ஏழு பேர் பலி

காத்மாண்டு: நேபாளத்தில் ஆன்மிக சுற்றுலா சென்ற வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், தமிழர்கள் ஏழு பேர் உயிரிழந்தனர்.

நம் அண்டை நாடான நேபாளத்தில் உள்ள புகழ்பெற்ற ஹிந்து வழிபாட்டு தலமான மனகாமனா கோவிலுக்கு, தமிழகத்தில் இருந்து 25 பேர் ஆன்மிக யாத்திரை சென்றனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்த அண்ணாமலை தலைமையில் இரு வேன்களில் சென்ற அவர்கள், பிற கோவில்களில் தரிசனம் முடித்துவிட்டு நேற்று திரும்பினர்.

அவர்கள் பயணித்த வேன், கோர்க்கா மாவட்டத்தின் ஆபு கைரேனி மலைப்பகுதி வழியாக நேற்று சென்றது.

வளைவு ஒன்றில் திரும்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், அருகில் இருந்த 400 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணித்த ஏழு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

உயிரிழந்தவர்கள், தேவகோட்டையைச் சேர்ந்த தனியார் வங்கியின் முன்னாள் அதிகாரி அண்ணாமலை, 58, அவர் மனைவி விஜயாள், 56, சகோதரி மீனாட்சி, மதுரையைச் சேர்ந்த சொர்ணநாதன் மனைவி சிவகாமி, பொள்ளாச்சியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முத்துக்குமார், 55, அவர் மனைவி மீனா, 48, மற்றும் தமிழரசி, 65, என அடையாளம் காணப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.

விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்களை உடனடியாக மீட்டு, சொந்த ஊர் அனுப்ப மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரி உள்ளனர்.

இதற்கிடையே, இறந்தவர்களின் உடல்களை தமிழகம் கொண்டுவரவும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Source link