தேனி: ஆண்டிபட்டி சட்டசபை தொகுதியில் வருஷநாடு அருகே ஒரு ஓட்டுச்சாவடியில் 5 வாக்காளர்கள் மட்டும் இடம் பெற்றுள்ளனர்.
தேனி மாவட்டம் -ஆண்டிபட்டி சட்டசபை தொகுதி முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதியாகும். இந்த தொகுதிக்கு உட்பட்ட வருஷநாடு அருகே வெள்ளிமலை கிராமம் உள்ளது. இந்த கிராமம் பாகம் எண் 245ல் இடம் பெற்றுள்ளது. இந்த பாகத்தில் 3 ஆண்கள், 2 பெண்கள் என 5 வாக்காளர்கள் மட்டும் இடம் பெற்றுள்ளனர். இதில் ஒருவர் முதல் முறை வாக்காளர் ஆவார். அரசு உதவி பெறும் பள்ளியில் ஓட்டுச்சாவடி தேர்தலுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுட்டிகாட்டிய தலைமை தேர்தல் கமிஷனர்: தமிழகத்தில் தேனி மாவட்டம், வருஷநாடு மலைப்பகுதியின் வெள்ளிமலை ஓட்டுச்சாவடியில் ஐந்து வாக்காளர்கள் மட்டும் உள்ளனர். இவர்களுக்கான தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கரடுமுரடான மலைப்பாதையில் மூன்று மணி நேரம் ஓட்டுப்பதிவு இயந்திரங்களுடன் செல்ல வேண்டியுள்ளது என இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் நேற்று அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இந்த ஓட்டுச்சாவடி வனப்பகுதியில் அமைந்துள்ளதாக வருவாய்த்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
