ஆர்கன்சாஸ்: உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப், ‘டிரிபிள் ஜம்ப்’ போட்டியில் இந்தியாவின் செல்வ பிரபு வெள்ளி வென்றார்.
அமெரிக்காவில், என்.சி.ஏ.ஏ., உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் (‘டிவிசன்-1’) நடந்தது. ஆண்களுக்கான ‘டிரிபிள் ஜம்ப்’ பைனலில் இந்தியாவின் செல்வ பிரபு 21, கான்சாஸ் பல்கலை., சார்பில் பங்கேற்றார். அதிகபட்சமாக 17.05 மீ., துாரம் தாண்டிய இவர், 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார். கடந்த 2022ல் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் (20 வயது) போட்டியில் வெள்ளி வென்ற தமிழகத்தின் செல்வ பிரபு, முதல் முறையாக 17.00 மீ., என்ற இலக்கை எட்டினார். இதற்கு முன், 2023ல் கிரீசில் நடந்த போட்டியில் 16.78 மீ., துாரம் தாண்டினார்.
பிரான்சின் ஜோனாதன் செரெமெஸ் (17.25 மீ.,), டிரினிடாட் அண்ட் டொபாகோவின் டேனியல் கெல்சி (16.68 மீ.,) முறையே தங்கம், வெண்கலம் கைப்பற்றினர்.
இத்தொடரில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், ஒரு வெள்ளி என 2 பதக்கம் கிடைத்தது. ஏற்கனவே லோகேஷ் சத்யநாதன் (நீளம் தாண்டுதல்) தங்கம் வென்றிருந்தார்.
