ரயிலின் வேகத்தை மேம்படுத்த பார்லிமென்ட் குழு பரிந்துரை

– நமது சிறப்பு நிருபர் -:

‘ரயில்களின் சராசரி வேகத்தையும், குறித்த நேரத்தில் இயக்குவதையும் அடிப்படை செயல்பாட்டு அம்சமாக மாற்ற வேண்டும், இதற்காக வெளியில் உள்ள தொழில் நுட்ப மற்றும் நிபுணத்துவ அமைப்புகளின் உதவியை பெற வேண்டும்’ என, பார்லிமென்டின் பொது கணக்கு குழு ரயில்வே அமைச்சகத்திற்கு வலியுறுத்தியுள்ளது.

பார்லிமென்ட் சபாநாய க ரால் ஒவ்வொரு ஆண்டும் நியமிக்கப்படும் பொது கணக்கு குழு, மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள், துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் வரவு செலவுகளை ஆய்வு செய்யும் பணியை செய்கிறது.

தற்போது இக்குழுவின் தலைவராக காங்கிரஸ் எம்.பி., வேணுகோபால் உள்ளார். 22 எம்.பி.,க்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இக்குழுவினர் ‘ரயில் இயக்கத்தில் நேரம் தவறாமை மற்றும் பயண நேரம்’ என்ற தலைப்பில் 63 பக்க அறிக்கையை சமீபத்தில் லோக்சபாவில் சமர்ப்பித்தனர்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

உலகின் நான்காவது பெரிய ரயில்வேவாக நம் ரயில்வே உள்ளது. அதன் செயல்திறனை தொடர்ந்து பாதிக்கும் முக்கிய சவாலாக காலதாமதம் உள்ளது. ரயில்களின் சராசரி வேகம் மற்றும் குறித்த நேரத்தில் இயக்குவது மேம்படாமல் இருப்பது, பயணியரை பாதிக்கிறது.

தற்போது ‘சூப்பர்பாஸ்ட்’ ரயில்களுக்கான சராசரி வேகம் மணிக்கு 55 கி.மீ., என இருப்பது இன்றைய தேவைகளுக்கும், உலகளாவிய தரங்களுக்கும் பொருந்தாததாக உள்ளது. இதை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

முழு பயணத்திலும் மணிக்கு 100 கி.மீ., என்ற நிலையான வேகத்தை அடையக்கூடிய வாய்ப்புகளை ஆராய வேண்டும்.

புதிய ரயில்கள் அறிமுகம் செய்யப்படும் போது, ஏற்கனவே இயங்கும் எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர்பாஸ்ட் ரயில்களை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு, தாமதம் அதிகரிக்கிறது.

ரயில்களின் வேகம் மற்றும் குறித்த நேரம் ஆகிய வற்றை மேம்படுத்த வெளியிலிருந்து நிபுணத் துவ மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளின் உதவியை பெற வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source link