கிராவல் மண் குவாரி ஒப்பந்ததாரர் மாற்றம்; அமைச்சர் தலையீட்டால் நடவடிக்கை

சென்னை: தமிழகத்தில் கிராவல் மண் எடுக்கும் குவாரிகளை, ஒட்டு மொத்தமாக கையாளும் ஒப்பந்ததாரர், திடீரென மாற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் ஆற்று மணலுக்கு அடுத்தபடியாக, கிராவல் மண் எடுப்பதற்கான அனுமதி பெறுவதில், கடுமையான போட்டி நிலவுகிறது. ஏரி, குளம் வாய்க்கால் பகுதிகளில், கிராவல் மண் எடுக்க, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வாயிலாக அனுமதி வழங்கப்படுகிறது.

இதற்கு, ‘ஆன்லைன்’ முறை அமலுக்கு வந்தாலும், குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்கள் வாயிலாக மட்டுமே, அனைத்து பணிகளும் நடக்கின்றன. குறிப்பாக, ஒவ்வொரு மாவட்டத்திலும், மூன்று இடங்கள் வரை, கிராவல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கும்.

இந்த அனுமதி, வெவ்வேறு பெயர்களில் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக ஒரு நபர் ஒப்பந்ததாரர் என்ற பெயரில், அனைத்து விவகாரங்களையும் கவனித்து வருகிறார். புதுக்கோட்டையை சேர்ந்த ராஜப்பா என்பவர் தான், இதுவரை இந்த விவகாரங்களை கவனித்து வந்தார்.

இவர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கம் என்பதால், இவரை மாற்ற முடியாத நிலை இருந்தது. இந்நிலையில், அமைச்சர் ஒப்புதலுடன் இவர் மாற்றப்பட்டு, புதுக்கோட்டையை சேர்ந்த கோபு என்பவரிடம், இந்த பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக, நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடந்துள்ள இந்த மாற்றம், அதிகாரிகள் மட்டத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

இதுகுறித்து, தமிழக மணல், எம் – சாண்ட் லாரி உரிமையாளர்களின் ஒருங்கிணைந்த நல சம்மேளன தலைவர் ஆர்.பன்னீர் செல்வம் கூறியதாவது: சட்ட விதிகளுக்கு உட்பட்டு, கிராவல் மண் குவாரிகளை நடத்த வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

இதில், சட்டத்துக்கு அப்பாற்பட்ட வகையில், ஒட்டுமொத்தமாக ஒப்பந்த தாரர் நியமிப்பது, பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாக உள்ளது. இதனால் தான், போலி ரசீதுகள், போலி பர்மிட் புழக்கம் அதிகரிக்கிறது.

போலி ஆவணங்கள் அடிப்படையில், கிராவல் மண் கடத்தும் வாகனங்களை பறிமுதல் செய்யும் அதிகாரிகள், அந்த மண் எங்கிருந்து, யார் பெயரில் கொண்டு வரப்பட்டது என்பதை விசாரிப்பதில்லை. இதனால், கிராவல் மண் கடத்தலும், அரசுக்கு வருவாய் இழப்பும் தொடர்கிறது. இதுபோன்ற முறைகேடுகளை அரசு நினைத்தால் மட்டுமே தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link