கோவை: பகுதி நேர படிப்பில், முனைவர் பட்டம் பெற்றவர்கள், உதவிப் பேராசிரியராக தகுதியில்லை என்ற உயர்கல்வித்துறை அரசாணை, ஆயிரக்கணக்கான உதவிப் பேராசிரியர்கள் மற்றும் முனைவர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக, டிச., 27ல் தேர்வு நடந்தது. 48 பாடங்களுக்கான, 2,708 பணியிடங்களுக்கு, 42,064பேர் தேர்வு எழுதினர். இதில், ஐந்து பாடப்பிரிவுகளுக்கு மட்டும் பிப்ரவரி, 25ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த, 11, 12ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டது.
இதில், 11 உதவிப் பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஐந்து பேருக்கு மட்டும்,13ம் தேதி பணி ஆணை வழங்கப்பட்டது. பணி நியமனம் வழங்கப்படாத, ஆறு பேரில் மூவர், பகுதி நேர படிப்பில் முனைவர் பட்டம் பெற்றதால், தகுதியற்றவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், 2016ம் ஆண்டின் பல்கலை மானிய குழுவின் விதிமுறைகளால், பகுதி நேர பிஎச்.டி., பட்டம் தகுதியற்றதா என்ற சந்தேகம் எழுந்த போது, 2017ல் பல்கலை மானிய குழு விளக்கம் அளித்தது.
தொலைதுார கல்வி முறையில் பெறப்பட்ட பிஎச்.டி., பட்டங்கள் தவிர, அந்தந்த பல்கலை விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்படும் பகுதி நேர பிஎச்.டி., பட்டங்களும் முழு நேர பட்டங்களாகவே கருத்தப்படும் என, அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. தற்போது, போதிய புரிதலின்றி பகுதிநேர முனைவர் பட்டம் தகுதியின்மை குறித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக முனைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
உதகை அரசு கலைக்கல்லுாரி கவுரவ விரிவுரையாளர் மோகன் கூறியதாவது: பகுதி நேர முனைவர் பட்டம் பெற்றவர்கள் கடந்த ஆண்டுகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், நுாற்றுக்கணக்கில் நியமனம் பெற்றுள்ளனர். இந்த நியமனங்களுக்கு கல்லுாரி கல்வி இணை இயக்குனர்களும், பல்கலைகளும் ஒப்புதல் கொடுத்த நிலையில், தற்போது தகுதியில்லை என்று சொல்வது அபத்தமானது.
தற்போது உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த,40,000க்கும் மேற்பட்டவர்களில், பாதிக்கும் மேல் பகுதிநேர முனைவர் பட்டம் பெற்றவர்கள் தான்.இந்த அரசாணையால் தேர்வர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.
