Grandma Moses: நம்பிக்கை தந்த தூரிகை; 78 வயதில் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த மூதாட்டியின் கதை!

ஒவ்வொரு நாளும் தொடங்கும்போது, நம் கனவுகளைத் துரத்த நமக்கு ஒரு சிறிய உத்வேகம் தேவைப்படும். “எனக்கு வயதாகிவிட்டது, இனிமேல் என்னால் புதிதாக எதையும் சாதிக்க முடியாது” என்ற எண்ணம் உங்கள் மனதில் ஒருபோதும் வரக்கூடாது என்பதற்கான ஆகச்சிறந்த உதாரணம் அன்னா மேரி ராபர்ட்சன் மோசஸ் (Anna Mary Robertson Moses). உலகமே இவரை அன்பாக `கிராண்ட்மா மோசஸ்’ (Grandma Moses) என்று அழைத்தது.Grandma Moses1860, செப்டம்பர் 7-ம் தேதி, அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள கிரீன்விச் என்ற விவசாய கிராமத்தில் பிறந்தார் அன்னா மேரி ராபர்ட்சன். வறுமையான குடும்பம், பத்து பிள்ளைகள் கொண்ட பெரிய வீடு. இதனால், அன்னாவுக்கு முறையான கல்வி கிடைக்கவில்லை. தனது வாழ்நாளில் அவர் சில மாதங்கள் மட்டுமே ஒரு சிறிய பள்ளிக்கூடத்திற்குச் சென்றார்.பன்னிரண்டு வயதிலேயே, குடும்ப வறுமையைப் போக்க பக்கத்து வீடுகளில் வேலைக்குச் சேர்ந்தார். தையல், சமையல், விவசாய வேலைகள் என அவர் இளமைக்காலம் முழுவதும் கடுமையான உழைப்பிலேயே கழிந்தது. கலை, ஓவியம் என்பதெல்லாம் அவர் கற்பனையிலும் எட்டாத ஆடம்பரங்களாக இருந்தன.Grandma Moses1887-ஆம் ஆண்டு, தனது 27-வது வயதில் தாமஸ் சால்மன் மோசஸ் என்ற விவசாயியைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகும் வாழ்க்கை எளிதாகிவிடவில்லை. இருவரும் இணைந்து விவசாயம் செய்தனர். அன்னா மொத்தம் 10 குழந்தைகளுக்குத் தாயானார்; ஆனால், மருத்துவ வசதிகள் இல்லாத அந்தக்காலத்தில், 5 குழந்தைகளைப் பறிகொடுத்தார்.

எத்தனையோ வலிகள், இழப்புகள், வறுமை இருந்தும், அவர் ஒருபோதும் முடங்கிப் போகவில்லை. 1927-ஆம் ஆண்டு, தனது கணவர் தாமஸையும் மாரடைப்பால் இழந்தார். அப்போது அன்னாவுக்கு வயது 67.கணவரின் மறைவிற்குப் பிறகு, அன்னாவால் தொடர்ந்து விவசாய வேலைகளைச் செய்ய முடியவில்லை. எனவே, ஓய்வு நேரத்தைக் கழிக்க கம்பளி நூல்களைக் கொண்டு எம்ப்ராய்டரி தையல் வேலைப்பாடுகளில் படங்களை உருவாக்கத் தொடங்கினார். ஆனால், விதி அங்கும் விளையாடியது. அவருக்குக் கடுமையான `கீல்வாதம்’ (Arthritis) நோய் வந்து, விரல்கள் வளைந்து, ஊசியைக்கூடப் பிடிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்.Grandma Mosesஅப்போது அவருடைய தங்கை, “நீ ஏன் எம்ப்ராய்டரிக்குப் பதிலாக, தூரிகையை (Brush) வைத்து ஓவியம் வரையக் கூடாது?” என்று யோசனை கூறினார். வலியில் தவித்த அந்த மூதாட்டி, தனது 78-வது வயதில், எவ்வித ஓவியப் பயிற்சியும் இல்லாமல் முதல்முறையாக தூரிகையைக் கையில் எடுத்தார்.அன்னா தனது கிராமத்து நினைவுகளை, விவசாய வாழ்க்கையை அழகிய ஓவியங்களாகத் தீட்டினார். 1938-ஆம் ஆண்டு, அவர் வசித்த ஹூசிக் ஃபால்ஸ் (Hoosick Falls) என்ற ஊரில் இருந்த ஒரு மருந்துக் கடையின் கண்ணாடியில், தனது ஓவியங்களை விற்பனைக்காக வைத்தார். ஒரு ஓவியத்தின் விலை வெறும் 3 முதல் 5 டாலர்கள் மட்டுமே.

அந்த வழியாக வந்த லூயிஸ் கேல்டார் (Louis J. Caldor) என்ற கலைப்பொருள் சேகரிப்பாளர், இந்த ஓவியங்களைப் பார்த்தார். அதிலிருந்த யதார்த்தமும், உயிரோட்டமும் அவரை ஈர்த்தன. உடனே அங்கிருந்த அனைத்து ஓவியங்களையும் வாங்கிய அவர், அன்னாவைத் தேடிச் சென்று அவரை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.Grandma Moses ஓவியம்ஒரு சாதாரண விவசாய மூதாட்டியின் ஓவியங்கள் நியூயார்க் நகரப் கண்காட்சிகளில் இடம்பெறத் தொடங்கின. 1940, அவரது 80-வது வயதில் `ஒரு விவசாய மனைவியின் ஓவியங்கள்’ (What a Farm Wife Painted) என்ற பெயரில் அவரது முதல் தனிக் கண்காட்சி நடந்தது. 1949ல் அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஹாரி எஸ். ட்ரூமன் (Harry S. Truman), அன்னாவின் கலையைப் பாராட்டி தேசிய விருதினை வழங்கினார். 1953ல் உலகப் புகழ் பெற்ற ‘டைம்’ (TIME) பத்திரிகையின் அட்டைப்படத்தில் அவரது புகைப்படம் வெளியாகி வரலாற்றில் இடம்பிடித்தது. அவர் தனது 78 வயதிற்குப் பிறகு சுமார் 1,500-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்தார். அவரது ஓவியங்கள் பல லட்சங்களுக்கு ஏலம் போயின.

கிராண்ட்மா மோசஸுக்கு வண்ணங்களைக் கலக்கவோ, வரைவதற்கான மற்ற விதிகளோ தெரியாது. தன்னிடம் இருந்த பெயிண்ட்கள், சாதாரண பலகைகள், மற்றும் தீப்பெட்டிகளைக் கொண்டே ஆரம்பத்தில் ஓவியங்கள் வரைந்தார். அவர் நேரில் பார்த்து எதையும் வரையவில்லை. தனது இளமைக்கால நினைவுகளையும், பழைய கிராமத்து வாழ்க்கையையும் மட்டுமே கற்பனையாக வரைந்தார்.அவரது 100-வது பிறந்தநாளை நியூயார்க் மாகாணம் `கிராண்ட்மா மோசஸ் தினம்’ (Grandma Moses Day) என்று அதிகாரபூர்வமாக அறிவித்துக் கொண்டாடியது. 1961-ஆம் ஆண்டு, டிசம்பர் 13-ஆம் தேதி, தனது 101-வது வயதில் அவர் இயற்கை எய்தினார்.Grandma Moses ஓவியம்தனது வாழ்க்கையின் வசந்த காலத்தை 78 வயதில்தான் மோசஸ் தொடங்கினார். வலிகளும், இழப்புகளும், தளர்ந்த உடலும் அவரது கற்பனைக்குத் தடையாக இருக்கவில்லை. எனவே, நாம் ஒரு புதிய தொழிலைத் தொடங்கவோ, படிக்கவோ, அல்லது கனவை நோக்கி ஓடவோ `காலம் கடந்துவிடவில்லை’. நம் வாழ்க்கையின் மிகச்சிறந்த அத்தியாயம் இனிமேல்தான் எழுதப்பட உள்ளது என்ற நம்பிக்கையுடன் இன்றைய நாளைத் தொடங்குவோம்!

Source link