காஜியாபாத்: உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாதில், கொரிய ‘ஆன்லைன் மொபைல் போன்’ விளையாட்டுக்கு அடிமையான மூன்று சகோதரியர் ஒரே நேரத்தில் வீட்டின் 9வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி.,யின் காஜியாபாதை சேர்ந்தவர் சேத்தன் குமார். சாஹிபாபாத் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின், 9வது மாடியில் வசித்து வருகிறார். இரு முறை திருமணம் செய்து கொண்ட சேத்தனுக்கு ஒரு மகன், நான்கு மகள்கள் உள்ளனர்.
இவர்களில் நிஷிகா, 16, பிராச்சி, 14, பாக்கி, 12, ஆகிய மூன்று மகள்களும் வீட்டின் 9வது மாடியில் இருந்து நேற்று கீழே குதித்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த மூவரையும் லோனியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து அறிந்ததும் அங்கு சென்ற போலீசார், ஒரே நேரத்தில் மூன்று சகோதரிகளும் தற் கொலை செய்து கொண்டது குறித்து விசாரித்தனர்.
அப்போது, மூன்று சகோதரியரும் கொரிய நாட்டின், ‘டாஸ்க்’ அடிப்படையிலான, ‘லவ் கேம்’ என்ற ஆன்லைன் விளை யாட்டுக்கு அடிமையானது தெரியவந்தது.
கொரோனா காலத்தில் துவங்கிய ஆன்லைன் விளையாட்டு பழக்கம், நாளடைவில் அவர்களை தனி உலகத்திற்கு அழைத்து சென்றது. இதனால், கடந்த இரு ஆண்டுகளாக மூவரும் பள்ளிக்கு கூட ஒழுங்காக செல்லவில்லை.
அதிக நேரம் மொபைல் போனில் மூழ்கி கிடந்ததால், இதை கண்டித்த பெற்றோர், அதை பயன்படுத்த கட்டுப்பாடு விதித்தனர்.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளான மூன்று சகோதரியரும் இந்த விபரீத முடிவை எடுத்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
”ஒன்றாகவே சாப்பிடுவது, துாங்குவது, குளிப்பது, பள்ளிக்கு செல்வது என இணை பிரியாமல் இருந்த மூன்று சகோதரியரும், சாவிலும் பிரியவில்லை,” என துணை கமிஷனர் சிங் கூறியது அனைவரது கண்களையும் கலங்க வைத்தது.
விசாரணையின்போது, போலீசார் மூன்று சகோதரி யரின் டைரியை கண்டுபிடித்தனர். அதில், ‘இந்த டைரியில் அனைத்தையும் எழுதியுள்ளோம். எல்லாமே இதில் இருக்கிறது. நாங்கள் தனிமையில் உள்ளோம்’ என எழுதப்பட்டு, அழுகை முகத்துடன் கூடிய படத்தையும் வரைந்துள்ளனர்.
மேலும், ‘மன்னித்து விடுங்கள் அப்பா’ எனவும் உருக்கமாக எழுதிஉள்ளனர்.
தற்கொலைக்கான உண்மையான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனிமை, தாழ்வு மனப்பான்மை
தற்கொலைக்கு இட்டுச் செல்லும்!
‘ஆன்லைன்’ மோகத்தில் இருந்து குழந்தைகளை மீட்டெடுப்பது குறித்து, சென்னையை சேர்ந்த மனநல ஆலோசகர் டாக்டர் ரவி சாமுவேல் கூறியதாவது: ‘மொபைல் போன்’களில் கேம் விளையாடும் பழக்கம், ‘ப்ரீ பிரன்டல் கார்ட்டெக்ஸ்’ எனப்படும் முடிவுகளை எடுக்கும், முன் மூளையை பாதிக்கிறது. இது போன்ற குழந்தைகளுக்கு, ‘சாப்பிடு, துாங்கு, படி, ஏன் ஸ்கூலுக்கு போக மாட்டேங்குற?’ என்று எந்த அறிவுரை சொன்னாலும் பிடிக்காது; இது அவர்களின் மன உறுதியை பாதிக்கும். எந்த வேலையையும் செய்யாமல், கேம்ஸ் ஆடுகிறோம். நம்முடைய தவறுகளை எல்லாம் சுட்டிக் காட்டுகின்றனர் என்பது அவர்களுக்கு புரியும். இது அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும். ஒரு கட்டத்தில் நாம் எதற்கும் லாயக்கில்லை என்று தோன்றும். தற்கொலை எண்ணம் வந்து விடும்.
எப்படி தடுப்பது?
ஆபத்தான விஷயங்கள் இருக்கும் விளையாட்டுகளை அனுமதிக்கக் கூடாது. பள்ளிக்கு செல்வதில், படிப்பதில் ஆர்வம், மதிப்பெண் குறைகிறதா, அதிக நேரம் தனிமையில் இருக்கின்றனரா, பேசுவதைத் தவிர்க்கின்றனரா, இயல்பாக பெற்றோர் பேசும் போது எரிச்சல் அடைகின்றனரா என்பதை கவனிக்க வேண்டும். இயல்புக்கு மாறாக இருக்கும் குழந்தைகள், ‘சாப்பிட வா’ என்று கூப்பிட்டாலும் கோபப்படுவர் ; வெளியில் செல்வதை, குடும்பத்தினரிடம் கலந்து பேசுவதை, இயல்பாக வீட்டில் நடக்கும் விஷயங்களில் பங்கேற்பதை விரும்ப மாட்டர். என்றைக்கு ஒரு குழந்தை கதவை மூடி அறைக்குள் தனியாக இருப்பது, மாடியில் உட்கார்ந்து படிக்கிறேன் என்று சொல்வது, நண்பர்களுடன் சேர்ந்து படிக்கச் செல்வது என்று ஆரம்பிக்கிறதோ, அன்று பிரச்னை ஆரம்பிக்கிறது. படிப்பைத் தவிர வேறு எதிலோ ஆர்வம் இருக்கிறது என்பதை பெற்றோர் புரிந்து, அனுமதிக்கக் கூடாது. படிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில், வீட்டு வேலைகள் அனைத்திலும் குழந்தைகளை ஈடுபடுத்துவது, அவர்களுடன் இயல்பாக பள்ளி, நண்பர்கள் என்று பல விஷயங்களை பேசுவது, மொபைல் போன் ஆர்வத்தை குறைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
