ரூ.2 கோடி முறைகேடு; திமுக பெண் சேர்மன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு

தஞ்சாவூர்: பேராவூரணி பேரூராட்சியில், டெண்டரில் முறைகேடு செய்த தி.மு.க., சேர்மன், அவரது கணவர் உட்பட ஏழு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி தலைவர் சாந்தி, 41; தி.மு.க.,வை சேர்ந்தவர். அவரது கணவர் சேகர், 45; தி.மு.க., பேரூர் கழக செயலர். சாந்தியின் மாமனார் செல்வராஜ், 60. இவர்கள் பெயரில், பேரூராட்சி பணிகளை டெண்டர் எடுத்து, முறைகேடுகளில் ஈடு பட்டதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக, தி.மு.க., பிரமுகரான ஒப்பந்ததாரர் செந்தில்குமார், 2025ல் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்படி, ஆய்வு நடத்திய அதிகாரிகள், 2 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்திருப்பதை உறுதி செய்தனர்.

இருப்பினும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், நீலகண்டன் என்பவர், லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் மனு அளித்ததோடு, நீதிமன்றத்திலும் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

நீதிமன்றத்தின் உத்தரவின்படி, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், மார்ச், 11ல் அய்யம்பேட்டையில், தற்போது பணியாற்றும் முன்னாள் பேராவூரணி பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேல், 53, சாந்தி, சேகர், செல்வராஜ், பேரூராட்சி முன்னாள் இளநிலை பொறியாளரும், தற்போது திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் பணியாற்றும் தாமஸ் ஆனந்த், 50, பேரூராட்சியின் தற்காலிக கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் ஜமுனாராணி, 44, நீலகண்டன், 44, ஆகியோர் மீது, 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, விசாரணையை துவங்கி உள்ளனர்.

Source link