சென்னை:இஸ்ரேல் – ஈரான் போர் நடந்து வருவதால், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ள நிலையில், மும்பை, சென்னை, துாத்துக்குடி உட்பட 12 துறைமுகங்களில், மொத்தம் 45,000 கன்டெய்னர்கள் தேங்கியுள்ளன.
இந்த 12 துறைமுகங்களில் இருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு அனைத்து வகையான பொருட்கள் ஏற்றுமதி செய்வது மறுஉத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், ஒவ்வொரு துறைமுகத்திலும், ஆயிரக்கணக்கான கன்டெய்னர்கள் தேங்கியுள்ளன. இரண்டு லட்சம் டன் பாசுமதி அரிசி தேக்கம் அடைந்துள்ளது.
இது குறித்து, மத்திய கப்பல் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:
போர் காரணமாக, இந்திய துறைமுகங்களில் இருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதால், கன்டெய்னர் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவுப்படி, துறைமுக வளாகங்களில், கன்டெய்னர்களை பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மும்பை, சென்னை, துாத்துக்குடி, குஜராத் மாநிலத்தின் முந்த்ரா, கேரளத்தின் விழிஞ்ஞம் ஆகிய ஐந்து துறைமுகங்களில் அதிகளவில் கன்டெய்னர்கள் தேங்கியுள்ளன.
ஆடைகள், உணவு தானியங்கள், பழங்கள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள், மருந்துகள், உதிரி பொருட்கள், இதர கருவிகள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்வது பெரிய அள வில் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
