வாஷிங்டன்: ”போர் மிக விரைவாக முடிவடைந்துவிடும்; அதன் பின் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடையும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்திக்கு போர்க்கப்பல்கள் அனுப்பாத நாடுகள் குறித்து அதிபர் டிரம்ப் விமர்சனம் செய்து உள்ளார். இது குறித்து அதிபர் டிரம்ப் கூறியதாவது: ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க நட்பு நாடுகள் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும். சீனா, ஜப்பான், பிரான்ஸ், நேட்டோ நாடுகள் தற்போது உதவாவிட்டால் அவர்களுக்கு எதிர்காலம் இல்லை. மற்ற நாடுகள் எங்களுடன் பாதுகாப்பு அளிக்க உதவினால் நல்லது. நாங்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவோம்.
போர் மிக விரைவாக முடிவடைந்துவிடும்; அதன் பின் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடையும்; ஈரானிடம் ஏவுகணைகள் குறைந்த அளவில் தான் உள்ளது; இதனால் தான் ஈரான் தாக்குதல்களை குறைத்துள்ளது. நாங்கள் அவர்களின் விமானப்படை, கடற்படை மற்றும் வான் பாதுகாப்பை அகற்றியுள்ளோம். நாங்கள் கார்க் தீவைத் தாக்கினோம். நாங்கள் எப்போதும் நேட்டோவுக்கு ஆதரவாக இருக்கிறோம். இஸ்ரேலுடன் நாங்கள் உண்மையில் மிகவும் இணக்கமாகப் பழகுகிறோம்.
ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பது குறித்து நாங்கள் பிற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். உங்களுக்குத் தெரியுமா? எங்களுக்கு இந்த ஜலசந்தி வழியாக எண்ணெய் கிடைப்பதில்லை; கிடைத்தாலும் மிகக் குறைவாகவே, அதாவது 1 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது. உதாரணமாக, சீனா தனது மொத்தத் தேவைக்கான எண்ணெயில் 90 சதவீதத்தை ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே பெறுகிறது. எனவே, பிற நாடுகளும் எங்களுடன் இணைந்து இப்பகுதியைப் பாதுகாப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.
நேட்டோ நாடுகள் மறுப்பு
எனினும் டிரம்ப் கூறியபடி, ஹார்முஸ் ஜலசந்திக்கு தங்கள் நாட்டு போர்க்கப்பலை அனுப்ப எந்த நாடும் முன்வரவில்லை. ஆஸ்திரேலியா வெளிப்படையாகவே, ‘நாங்கள் அனுப்ப மாட்டோம்’ என்று கூறி விட்டது. மற்ற நாடுகளும் இது பற்றி எதுவும் கருத்து தெரிவிக்காமல் அமைதியாக உள்ளன. நேட்டோ நாடுகளும் தயாராக இல்லை.
