சென்னை: பிரபல ரௌடி என்கவுன்ட்டர் – யார் இந்த `தொப்பை கணேஷ்'?

சென்னை வியாசர்பாடி பிவி காலனி சேர்ந்தவர் டில்லி கணேஷ் என்கிற பிரபல ரௌடி கணேஷ். இவருக்கு தொப்பை இருந்ததால் சக கூட்டாளிகளால் தொப்பை கணேஷ் என அழைக்கப்பட்டார். அதனால் போலீஸ் ரெக்கார்டில் இவரின் பெயர் தொப்பை கணேஷ் என பதிவு செய்யப்பட்டது.

இவர் மீது மூன்று கொலை வழக்குகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஜனவரி மாதம் புழல் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் 25 லட்ச ரூபாய், 15 சவரன் நகை கொள்ளை போனது. இந்த வழக்கில் சிலரை போலீஸார் கைது செய்த நிலையில் ரௌடி தொப்பை கணேஷை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் மாதவரம் பகுதியில் அவர் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் டீம் அங்குச் சென்று ரௌடி தொப்பை கணேஷை சுற்றி வளைத்தனர்.

பின்னர் அவரை சரண் அடையுமாறு போலீஸார் எச்சரித்தனர். அப்போது அவர், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தனிப்படையைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, காவலர் திணேஷ்குமார் ஆகியோரை வெட்டினார். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது.

இந்தச் சமயத்தில் தொப்பை கணேஷ் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். அதனால் தற்காப்புக்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் பூபதி ராஜா, தொப்பை கணேஷை துப்பாக்கியால் சுட்டார். மார்பு பகுதியில் குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார் ரௌடி தொப்பை கணேஷ்.

உடனடியாக அவரை மீட்ட போலீஸார், மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தொப்பை கணேஷை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டார் என்று தெரிவித்தனர். இதையடுத்து தொப்பை கணேஷ் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட தகவலை தனிப்படை போலீஸார் உயரதிகாரிகளுக்கு தெரிவித்தனர். பின்னர் அவரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த இடத்துக்கு போலீஸ் உயரதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். என்கவுன்ட்டர் டீமில் உள்ள போலீஸாரிடமும் காயமடைந்த போலீஸாரிடமும் உயரதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

யார் இந்த தொப்பை கணேஷ்?

யார் இந்த தொப்பை கணேஷ் என ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாரிடம் விசாரித்தோம்.

“சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த தொப்பை கணேஷ், பிரபல ரௌடி சேரா, அவரின் மகன் கதிரின் நெருங்கிய கூட்டாளியாக வலம் வந்தவர். சேரா டீமுக்கும் அவரின் எதிர்டீமான ரௌடி பழனி டீமுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வருகிறது. அதன்காரணமாக இரண்டு டீம்களிலும் பழிக்குப்பழியாக கொலைகள் நடந்து வந்தன. இந்தநிலையில் ரௌடி பழனியின் சித்தப்பாவான தி.மு.க வட்டச் செயலாளர் இடிமுரசு இளங்கோவை சேரா டீம் போட்டுத் தள்ளியது. அடுத்து ரௌடி பழனியையும் தீர்த்துக் கட்டியது.

சம்பவ இடத்தில் போலீஸ் டீம்

அதனால் ஆத்திரமடைந்த ரௌடி பழனியின் தம்பி சூழ்ச்சி சுரேஷ் தலைமையிலான ரௌடி டீம், கதிர், தொப்பை கணேஷ் ஆகியோரை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச் போட்டு வந்தது. இதில் தொப்பை கணேஷ் மீது வெடிகுண்டு வீசிய போதிலும் அவர் உயிர்தப்பிவிட்டார். இந்தநிலையில்தான் என்கவுன்ட்டரில் தொப்பை கணேஷ் உயிரிழந்திருக்கிறார்” என்றனர்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான அடுத்த நாளே இந்த என்கவுன்ட்டர் நடந்திருக்கிறது.

Source link