பார்லி.,யில், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியில் இறங்கி ரகளையில் ஈடுபட்டதை அடுத்து, ஜனாதிபதி உரைக்கு

பார்லி.,யில், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியில் இறங்கி ரகளையில் ஈடுபட்டதை அடுத்து, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளித்து பேச, லோக்சபாவுக்கு பிரதமர் நரேந்திர மோடியால் திட்டமிட்டபடி வர முடியவில்லை.

லோக்சபா காலையில் கூடியதுமே, ‘ஜனாதிபதி உரை மீது எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை பேச அனுமதிக்க வேண்டும்’ என வலியுறுத்தி, காங்., – எம்.பி.,க்கள் கடும் அமளியில் இறங்கியதால், கேள்வி நேர அலுவல்கள் ரத்து செய்யப்பட்டு, உடனடியாக சபை ஒத்தி வைக்கப்பட்டது.

மீண்டும் 12:00 மணிக்கு சபை கூடிய போது, மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் அறிக்கை தாக்கல் செய்து பேச முயன்றார். அப்போதும் கடும் அமளி ஏற்படவே, சபை ஒத்தி வைக்கப்பட்டது.

மதியம் 2:00 மணிக்கு மீண்டும் கூடியும் அலுவல்களை மேற்கொள்ள முடியாமல் சபை ஒத்தி வைக்கப்பட்டது. ஏற்கனவே அறிவித்தபடி, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்து, பிரதமர் மோடி பேசுவார் என்ற எதிர்பார்ப்பில், மாலை 5:00 மணிக்கு சபை கூடியது.

ஆனால், அதுவும் நடக்காததால், லோக்சபா நாள் முழுதும் ஒத்தி வைக்கப்பட்டது.

பிரமாண்ட பேனர்களை சபைக்குள் எடுத்து வந்து, அவற்றை உயர்த்திப் பிடித்து, காலை முதலே காங்., – எம்.பி.,க்கள் ரகளையில் ஈடுபட்டபடியே இருந்தனர்.

சபாநாயகர் இருக்கை, மத்திய அமைச்சர்கள் அமரும் இடம் என, அனைத்தையும் மறைத்தபடி நின்றனர். சபையின் மையப் பகுதியை முற்றுகையிட்ட அவர்கள், ‘ராகுலை பேச விடாமல் தடுத்ததை ஏற்க முடியாது. அவரை பேச விடாமல் சபையை நடத்த விட மாட்டோம்’ என, முழக்கமிட்டனர்.

மேலும், பிரதமர் மோடி, ராணுவ முன்னாள் தளபதி நரவனே, எப்ஸ்டீன் ஆகியோரது புகைப்படங்கள் அடங்கிய போஸ்டர்களையும் ஏந்தியபடி கூச்சலிட்டனர். மேலும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பெண் எம்.பி.,க்கள், பிரதமர் மோடியின் இருக்கையை முற்றுகையிட்டு, காலை முதலே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் மோடி உரை நிகழ்த்தும் போது, எதிர்க்கட்சி எம்.பி.,க்களால் சபைக்குள் அசம்பாவிதங்கள் நிகழக்கூடும் என்ற அச்சமும், பரபரப்பும் நிலவியது. அனைத்து நிலவரங்களை கருதியே, வேறு வழியின்றி சபை முழுதுமாக ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. லோக்சபாவில் பிரதமர் மோடி இன்று பதிலுரை அளிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

நிஷிகாந்த் துபே மீது காங்., புகார் லோக்சபாவில் நேற்று, பா.ஜ., – எம்.பி., நிஷிகாந்த் துபே, முன்னாள் பிரதமர்கள் மறைந்த நேரு, இந்திரா ஆகியோர் குறித்து சில புத்தகங்களை மேற்கோள்காட்டி விமர்சித்தார். இதற்கு காங்., – எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக, சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் அளிக்க, அவரது அறைக்கு காங்., – எம்.பி.,க்கள் சென்றனர். அப்போது, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, நிஷிகாந்த் துபே அங்கிருந்தனர். அங்கும் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கும்படி காங்., – எம்.பி.,க்களுக்கு சபாநாயகர் அறிவுறுத்தினார். காங்., – எம்.பி., வேணுகோபால் கூறுகையில், ”ராகுல் பேசும் போது விதிகளை மீறுவதாகக் கூறும் மத்திய அரசு, நிஷிகாந்த் துபே புத்தகங்களை வாசிக்கும் போது அமைதி காப்பது ஏன்? இது ஜனநாயகப் படுகொலை,” என்றார். நிஷிகாந்த் துபே கூறுகையில், ”வெளியிடப்படாத ஒரு புத்தகத்திற்காக பார்லி., தற்போது முடக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே வெளியாகி நாட்டில் தடை செய்யப்பட்ட புத்தகங்கள் குறித்தும் விவாதிக்க வேண்டும். நேரு குடும்பத்தின் உண்மை முகம் விவாதத்தின் மூலம் வெளிப்படும்,” என்றார்.

மத்திய அமைச்சருடன் லடாய் லோக்சபாவிலிருந்து, ‘சஸ்பெண்ட்’ ஆன காங்கிரசைச் சேர்ந்த எட்டு எம்.பி.,க்கள், பார்லி., வளாகத்தில் உள்ள மகர் துவார் படிக்கட்டுகளில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பா.ஜ.,வைச் சேர்ந்த ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு, ”கார்கில் போரில் வென்றது போல அமர்ந்திருக்கின்றனர்,” என, அவர்களை பார்த்து கூறினார். இதற்கு பதிலளித்த ராகுல், ”இதோ துரோகி நண்பர் வருகிறார். அவர் முகத்தை பாருங்கள்,” என, ரவ்நீத் சிங் பிட்டுவை பார்த்து சிரித்தபடி கூறினார். மேலும், ”துரோகி நண்பரே, கவலைப்படாதீர்கள். நீங்கள் மீண்டும் காங்கிரசுக்கு வருவீர்கள்,” என்றார். அதோடு, கை குலுக்குவதற்காக ராகுல் நீட்டவே கடுப்பாகி மறுத்து விட்ட ரவ்நீத் சிங் பிட்டு, ”இந்த நாட்டின் எதிரி நீங்கள்,” என்று கோபப்பட்டார். இரு தரப்பும் வார்த்தைகளால் மோதிக் கொள்ளும் நிலை உருவானதால், பதற்றம் நிலவியது. ரவ்நீத் சிங் பிட்டு, ஏற்கனவே காங்கிரசில் இருந்தவர். மூன்று முறை எம்.பி.,யான அவர், 2024 லோக்சபா தேர்தலுக்கு முன் பா.ஜ.,வில் இணைந்தார்.

நரவனே புத்தகத்தில் எழுதியது என்ன: செய்தியாளர்களிடம் விளக்கிய ராகுல்! பார்லி., வளாகத்தில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், ராணுவ முன்னாள் தளபதி நரவனே எழுதியதாகக் கூறப்படும், இதுவரை வெளியிடப்படாத அவரது சுயசரிதையான, ‘போர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ்டினி’ என்ற புத்தகத்தை காட்டினார். ராகுல் கூறியதாவது: சுயசரிதை புத்தகத்தில், லடாக்கில் என்ன நடந்தது என்பதை ராணுவ முன்னாள் தளபதி நரவனே விரிவாக எழுதி உள்ளார். இதை நாட்டின் இளைஞர்கள் அனைவரும் தவறாமல் படிக்க வேண்டும். ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அழைத்து, சீனப் படைகள் கைலாஷ் முகடுக்கு வந்து விட்டன; என்ன செய்ய வேண்டும் என, நரவனே கேட்டிருக்கிறார். இதற்கு பதில் அளிக்கப்படவில்லை. தொடர்ந்து, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் அவர் கேட்டுள்ளார். ஆனால், எந்த பதிலும் கிடைக்கவில்லை. பின், ராஜ்நாத் சிங்கை மீண்டும் அழைத்த போது, மேலிடத்தில் கேட்பதாகக் கூறியுள்ளார். மேலிடத்தின் நிரந்தர உத்தரவு என்னவென்றால், சீனப் படைகள் எல்லைக்குள் வந்தால், அனுமதி இல்லாமல் சுடக்கூடாது என்பது தான். நரவனேவும், நம் ராணுவமும் சீனப் படைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த விரும்பின. ஏனெனில், அவை நம் எல்லைக்குள் வந்துவிட்டன. பின், ‘எது சரி என்று நினைக்கிறீர்களோ அதை செய்யுங்கள்’ என, நரவனேவிடம் பிரதமர் மோடி கூறினார். தன் கடமைகளை அவர் செய்யவில்லை; பொறுப்பை நிறைவேற்ற தவறி விட்டார். முழு அரசு இயந்திரமும் தன்னைக் கைவிட்டு விட்டதாகவும், தான் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் இச்சம்பவம் குறித்து புத்தகத்தில் நரவனே குறிப்பிட்டுள்ளார். லோக்சபாவுக்கு வர பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லை. அவர் வந்தால், இந்த புத்தகத்தை நேரில் சென்று அவரிடம் அளிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

– நமது டில்லி நிருபர் -:

Source link