தென் மாவட்டங்களில் 'சீட்' கேட்கும் வி.சி.,

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில், வட மாவட்டங்களை போல தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களிலும் போட்டியிட விடுதலை சிறுத்தைகள் கட்சி முடிவு செய்து உள்ளது.

தி.மு.க., கூட்டணியில், அப்பகுதியில் ‘சீட்’ பெறவும் அக்கட்சி முயற்சித்து வருகிறது.

கடந்த 2001ம் ஆண்டில் இருந்து சட்டசபை தேர்தலை சந்தித்து வரும் வி.சி., கட்சி, ஒவ்வொரு தேர்தலிலும், தி.மு.க., – அ.தி.மு.க., என மாறி மாறி கூட்டணி அமைத்து போட்டியிட்டு வருகிறது.

பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருந்த நிலையில், கடந்த இரு தேர்தல்களில், இரண்டு எம்.பி.,க்கள், நான்கு எம்.எல்.ஏ.,க்களை பெற்றதன் வாயிலாக, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வளர்ந்துள்ளது.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக, தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகித்து வரும் வி.சி., அக்கூட்டணியில் முக்கிய கட்சியாக பார்க்கப்படுகிறது.

கடந்த தேர்தலில், வட மாவட்டங்களில் ஆறு தொகுதிகளில் போட்டியிட்டு நான்கு தொகுதிகளில் வென்றது. வரும் சட்டசபை தேர்தலில், தென் மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்களிலும் போட்டியிட, தங்களுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என, தி.மு.க.,விடம் வி.சி., வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து, வி.சி., செய்தி தொடர்பாளர் பாவலன் கூறியதாவது:

எங்கள் கூட்டணியில், தி.மு.க.,வுக்கு அடுத்து பெரிய கட்சியாக வி.சி., உள்ளது.

மேலும், பல ஆயிரம் நிர்வாகிகளை கொண்ட கட்சியாகவும் வளர்ந்துள்ளது. அனைத்து கிராமங்கள் மற்றும் தொகுதிகளிலும் எங்கள் கட்சிக்கு பொறுப்பாளர்கள் உள்ளனர். எனவே, கூட்டணியில் 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவோம்.

குறிப்பாக, தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் எங்களுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளின் பட்டியலை தயாரித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link