தேமுதிகவுக்கு எத்தனை தொகுதி என்பதை முதலில் சொல்லுங்கள்; திமுகவுக்கு விசி., – கம்யூ., நெருக்கடி

சென்னை: ‘தே.மு.தி.க., தொகுதி பங்கீட்டை முதலில் இறுதி செய்து விட்டு, பின்னர் எங்களை அழையுங்கள்’ என, தி.மு.க., தலைமையிடம், வி.சி., மற்றும் கம்யூ., கட்சிகள் கூறியுள்ளன.

கடந்த 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், இந்திய கம்யூ.,- மார்க்சிஸ்ட் கம்யூ., – வி.சி., கட்சிகளுக்கு தலா ஆறு இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில், வி.சி., நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. கம்யூ., கட்சிகள் தலா இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றன.

இத்தேர்தலில், கூடுதல் தொகுதிகளை மூன்று கட்சிகளும் எதிர்பார்க்கின்றன. வி.சி., மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிகள், இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை எதிர்பார்க்கின்றன. கடந்த முறை தோல்வி அடைந்ததால், எண்ணிக்கையை குறைக்க, தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது.

அதே தொகுதிகளை தரும்பட்சத்தில், இரண்டு தொகுதிகளில் தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் எனவும், அழுத்தம் தரப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தி.மு.க., கூட்டணியில் புதிதாக இணைந்த தே.மு.தி.க.,வுக்கு, அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

கடந்த 2011 சட்டசபை தேர்தலுக்கு பின், பெரும் பின்னடைவை சந்தித்து வரும் அக்கட்சிக்கு, ராஜ்யசபா எம்.பி., பதவியை தி.மு.க., தந்துள்ளது. அக்கட்சிக்கு எட்டு தொகுதிகள் வரை பேசி முடிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், கூட்டணியில் பிரச்னை எழாமல் இருக்க, அதை, இன்னும் தி.மு.க., தலைமை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

எனவே, தே.மு.தி.க., தொகுதி பங்கீட்டை முடித்துவிட்டு, தங்களிடம் பேச்சை தொடரும்படி, இம்மூன்று கட்சிகள் தரப்பில், தி.மு.க.,விடம் கூறப்பட்டுள்ளது. இது குறித்து வி.சி., நிர்வாகிகள் கூறியதாவது: கூட்டணியில் தே.மு.தி.க.,வுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. பானை சின்னம் இருக்கும் நிலையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட அழுத்தம் தருவதை, தன்மான பிரச்னையாக பார்க்கிறோம்.

எனவே, தே.மு.தி.க., தொகுதி பங்கீட்டை முடித்து விட்டு, எங்களை அழையுங்கள் என தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழுவிடம் கூறப்பட்டு விட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.இதை வெளிப்படையாக சொல்லாமல், நிர்வாக குழு கூட்டம் என்ற பெயரில், கம்யூனிஸ்ட் கட்சிகள் காலம் தாழ்த்தி வருகின்றன.

Source link