டெஹ்ரான்: ஈரானில் சிக்கியிருந்த, 550க்கும் மேற்பட்ட இந்தியர்கள், அதன் அண்டை நாடான ஆர்மீனியா வழியாக பத்திரமாக மீட்டு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மேற்காசிய நாடான ஈரானில் போர் பதற்றம் நீடித்து வருகிறது. நம் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் தரவுகளின் படி, ஈரானில் 9,000 இந்தியர்கள் வசித்து வருகின்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக, தலைநகர் டெஹ்ரானில் இருந்து பல இந்தியர்கள் ஈரானின் பிற பாதுகாப்பான நகரங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஈரானில் இருந்து தாயகம் திரும்ப விரும்புவோர் மேற்காசிய நாடுகளான ஆர்மீனியா அல்லது அஜர்பைஜான் வழியாக செல்லுமாறு இந்தியத் துாதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து, சமீபத்தில் ஈரானுக்கு புனித யாத்திரை மேற்கொண்ட 284 பேர் உட்பட 550க்கும் மேற்பட்டோர் ஆர்மீனியா எல்லை வழியாக ஈரானில் இருந்து வெளியேறினர். இதில் ஈரானில் உள்ள பல்வேறு பல்கலையில் படித்த மாணவர்களும் அடங்குவர். ஆர்மீனியா தவிர, 90 இந்தியர்கள் அஜர்பைஜான் நாட்டின் நிலப்பகுதி வழியாகவும் வெளியேறியுள்ளனர்.
இது குறித்து நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ‘ஈரானில் இருந்து இதுவரை 550க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற உதவிய ஆர்மீனியா அரசுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் நன்றி. இந்த சவாலான காலங்களில் அவர்களின் ஆதரவை பாராட்டுகிறேன்’ என, குறிப்பிட்டுள்ளார்.
