புதுடில்லி: சிறந்த வீரர், வீராங்கனைக்கான பி.சி.சி.ஐ., விருது, இந்தியாவின் சுப்மன் கில், ஸ்மிருதி மந்தனாவுக்கு வழங்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கப்படும். கடந்த ஆண்டு சாதித்தவர்களுக்கான ‘நமன்’ விருது வழங்கும் நிகழ்ச்சி டில்லியில் நடந்தது.
சிறந்த வீரருக்கான ‘பாலி உம்ரிகர்’ விருது, டெஸ்ட், ஒருநாள் போட்டி அணி கேப்டன் சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது. இவர், 2வது முறையாக (2023, 2026) இவ்விருதை பெற்றார். கடந்த ஆண்டு சுப்மன் விளையாடிய 35 சர்வதேச போட்டியில், 7 சதம், 3 அரைசதம் உட்பட 1764 ரன் குவித்தார்.
சிறந்த வீராங்கனைக்கான விருதை ஸ்மிருதி மந்தனா 5வது முறையாக தட்டிச் சென்றார். கடந்த ஆண்டு சர்வதேச அரங்கில் 1703 ரன் குவித்த ஸ்மிருதி, ஒருநாள் போட்டியில் மட்டும் 1362 ரன் விளாசினார். ஒருநாள் போட்டி வரலாற்றில் ஒரு சீசனில் 1000 ரன்னை எட்டிய முதல் வீராங்கனையானார்.
சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது, முன்னாள் இந்திய நட்சத்திரங்களான ராகுல் டிராவிட், ஸ்டூவர்ட் பின்னி, மிதாலி ராஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
ஐ.சி.சி., உலக கோப்பை தொடர்களில் (2025-26) கோப்பை வென்று சாதித்த 5 இந்திய அணியில் இடம் பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
டிராவிட் கூறுகையில், ”கடந்த 30 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு, திறமையான வீரர், வீராங்கனைகள், நல்ல நிர்வாகிகள், சிறந்த பயிற்சியாளர்கள் இருப்பது காரணம். உள்ளூர் போட்டிகளுக்கான கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. வாழ்நாள் சாதனையாளர் விருது வென்றது மகிழ்ச்சி,” என்றார்.
