புதுடில்லி: நாடு முழுதும், 10 மாநிலங்களில் காலியாக இருந்த, 37 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் நடந்தது. இதில், 26 இடங்கள் போட்டியின்றி தேர்வான நிலையில், எஞ்சிய 11 இடங்களுக்கு நேற்று தேர்தல் நடந்தது.
பீஹாரில் ஐந்து, ஒடிஷாவில் நான்கு மற்றும் ஹரியானாவில் இரு இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டன.
பீஹாரில் அம்மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார், பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இவர்களுடன் தே.ஜ., கூட்டணி வேட்பாளர்கள் ராம்நாத் தாக்கூர், உபேந்திர குஷ்வாஹா மற்றும் பா.ஜ.,வின் ஷிவேஷ் ராம் ஆகியோரும் பீஹாரில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வாகினர்.
ஒடிஷாவில் நான்கு இடங்களுக்கு தேர்தல் நடந்தது.
இதில் இரு இடங்களில் பா.ஜ., வெற்றியும், ஒரு இடத்தில் பிஜு ஜனதா தளத்தின் வெற்றியும் உறுதியான நிலையில், நான்காவது இடத்துக்கு, பா.ஜ., ஆதரவு சுயேச்சை வேட்பாளர் திலீப் ராய் – பிஜு ஜனதா தள வேட்பாளர் தத்தேஸ்வர் ஹோட்டா இடையே கடும் போட்டி நிலவியது.
திலீப் ராய் வெற்றிக்கு கூடுதலாக எட்டு ஓட்டுகள் தேவைப்பட்ட நிலையில், தத்தேஸ்வர் ஹோட்டாவுக்கு, 12 ஓட்டுகள் தேவைப்பட்டன. காங்கிரசின் 14 எம்.எல்.ஏ.,க்கள் தத்தேஸ்வர் ஹோட்டாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் அவர் வெற்றி பெறுவார் என, எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நேற்று நடந்த தேர்தலில், பா.ஜ., ஆதரவு சுயேச்சை வேட்பாளர் திலீப் ராய் வெற்றி பெற்றார். பிஜு ஜனதா தளத்தின் எட்டு எம்.எல்.ஏ.,க்கள் திலீப் ராய்க்கு ஆதரவாக ஓட்டு போட்டதே வெற்றிக்கு காரணம் என தெரிகிறது.
ஒடிஷாவின் நான்கு இடங்களில், பா.ஜ., வேட்பாளர்கள் மன்மோகன் சமல், சுஜீத் குமார்; ஒரு இடத்தில் பிஜு ஜனதா தளத்தின் சந்த்ருப்த் மிஸ்ரா; மற்றொரு இடத்தில் தீலிப் ராய் வெற்றி பெற்றனர்.
ஹரியானாவில் இரு இடங்களுக்கான ஓட்டு எண்ணிக்கையின் போது ஓட்டு ரகசியம் மீறப்பட்டதாக புகார் எழுந்ததால், அந்த முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பா.ஜ., – காங்., வேட்பாளர்கள் இடையே அங்கு கடும் போட்டி நிலவுகிறது.
முன்னதாக, தமிழகத்தில் காலியாக இருந்த ஆறு ராஜ்யசபா இடங்களுக்கும் தி.மு.க., – அ.தி.மு.க., – காங்., வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகினர்.
அதே போல், மஹாராஷ்டிராவில் தேசியவாத சரத் சந்திர பவார் கட்சித் தலைவர் சரத் பவார், பா.ஜ.,வின் வினோத் தாவ்டே, தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்ற இந்திய குடியரசு கட்சி தலைவர் ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்ட ஏழு பேர் போட்டியின்றி தேர்வாகினர்.
மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்., வேட்பாளர்கள் பாபுல் சுப்ரியோ, நடிகை கோயல் மல்லிக் வெற்றி பெற்றனர்.
