கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 144 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை, பா.ஜ., நேற்று வெளியிட்டது. இதன்படி, பா.ஜ., மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி, பவானிபூர், நந்திகிராம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
இதில் பவானிபூர் தொகுதி, முதல்வர் மம்தா பானர்ஜியின் கோட்டை. அவரது தொகுதியில் சுவேந்து அதிகாரி போட்டியிட உள்ளது,
தேர்தல் களத்தை பரபரப்பாக்கி உள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்கு முன், திரிணமுல் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்த சுவேந்து அதிகாரி, அந்த தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜியை தோற்கடித்தார்.
முதல்வர் மம்தாவுக்கு மீண்டும் நேரடி சவால் விடும் வகையில், அவரது கோட்டைகளாக கருதப்படும் பவானிபூர், நந்திகிராம் ஆகிய தொகுதிகளில் சுவேந்து அதிகாரி களமிறங்குகிறார். முதற்கட்ட பட்டியலில், 10 பெண் வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
தவிர, பா.ஜ., மூத்த நிர்வாகிகள் ஸ்வபன் தாஸ்குப்தா – ராஷ்பெஹாரி; அக்னிமித்ரா பால் – ஆசன்சால் தெற்கு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
இதற்கிடையே, ஆளும் திரிணமுல் காங்கிரசின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகும் என கூறப்படுகிறது. பவானிபூர், நந்திகிராம் ஆகிய தொகுதிகளில் சுவேந்து அதிகாரியை எதிர்த்து முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் போட்டியிடுவாரா அல்லது தொகுதி மாறுவாரா என்பது தெரிந்து விடும்.
