புதுடில்லி: பஞ்சாப், கோவா அணிகள் மோதிய ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டி 1-1 என ‘டிரா’ ஆனது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 12வது சீசன் நடக்கிறது. டில்லியில் நடந்த லீக் போட்டியில் பஞ்சாப், கோவா அணிகள் மோதின. ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் எபியோங் ஒரு கோல் அடிக்க, முதல் பாதி முடிவில் பஞ்சாப் அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட கோவா அணிக்கு 53வது நிமிடத்தில் டிராஜிக் ஒரு கோல் அடித்தார். கடைசி நிமிடம் வரை போராடிய இரு அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என ‘டிரா’ ஆனது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இதுவரை விளையாடிய 5 போட்டியில், 2 வெற்றி, 3 ‘டிரா’ என, 9 புள்ளிகளுடன் கோவா அணி 4வது இடத்துக்கு முன்னேறியது. பஞ்சாப் அணி, 4 போட்டியில், ஒரு வெற்றி, 2 ‘டிரா’, ஒரு தோல்வி என 5 புள்ளிகளுடன் 8வது இடத்துக்கு முன்னேறியது.
