ஆசியாவின் பெரிய துலிப் தோட்டம் ஜம்மு – காஷ்மீரில் மீண்டும் திறப்பு

ஸ்ரீ நகர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், மூடப்பட்ட ஜம்மு – காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள மிகப்பெரிய துலிப் தோட்டம், பார்வையாளர்களுக்காக நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.

ஜம்மு – காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள இந்திரா காந்தி நினைவு துலிப் மலர்கள் தோட்டம், ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டமாக கருதப்படுகிறது.

மொத்தம் 75 ஏக்கர் பரப்பளவில் தால் ஏரியின் கரையில், ஜபர்வான் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த தோட்டம், சுற்றுலா பயணியரை கவர்ந்து வருகிறது.

ஆண்டுதோறும் மார்ச் – ஏப்., மாதங்களில், 15 லட்சத்துக்கும் அதிகமான துலிப் மலர்கள் மற்றும் 75க்கும் மேற்பட்ட இதர மலர்கள் இங்கு பூத்து குலுங்குகின்றன.

கடந்தாண்டு ஏப்ரலில், பஹல்காமில், சுற்றுலா பயணியர் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து, துலிப் தோட்டம் மூடப்பட்டது. பாதுகாப்பு படையினரின் சோதனையைத் தொடர்ந்து, இந்த தோட்டம், சுற்றுலா பயணியரின் வருகைக்காக நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. தோட்டத்தை ஜம்மு – காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா திறந்து வைத்தார்.

வழக்கமாக, ஆண்டுதோறும் மார்ச் மாதம் கடைசி வாரத்தில் திறக்கப்படும் துலிப் தோட்டம், ஜம்மு – காஷ்மீரில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக, 10 நாட்கள் முன்பாகவே திறக்கப்பட்டுள்ளது.

Source link