சென்னை: மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாங்கிய சொத்து விவகாரம் தொடர்பாக, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடக்கும் சிவில் வழக்கு விசாரணைக்கு, இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கடந்த, 1988ம் ஆண்டு, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, 4.7 ஏக்கர் நிலத்தை, சம்பந்த முதலியார் என்பவரின் குடும்பத்தினரிடம் இருந்து, ஸ்ரீதேவி வாங்கியுள்ளார். 37 ஆண்டுகளாக சொத்தை அனுபவித்து வரும் நிலையில், சம்பந்த முதலியாரின் மகன் சந்திரசேகரனின் இரண்டாவது மனைவியின் மகன் நடராஜன், மகள் சிவகாமி என, மூன்று பேர் வாரிசு சான்றிதழ் பெற்று, சொத்தில் தங்களுக்கு பங்கு உள்ளதாக கூறி, செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், அவரது மகள்கள், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த செங்கல்பட்டு நீதிமன்றம், ‘முழுமையான விசாரணைக்கு பின்பே, சொத்தின் உரிமை குறித்து முடிவெடுக்க முடியும்’ என்று கூறி, போனி கபூர் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, போனி கபூர், அவரது மகள்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.வி.தமிழ்செல்வி, இறுதி விசாரணைக்காக, வரும் 26ம் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்தார்; அதுவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டார்.
