தர்ப்பூசணி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தாதீர்: உணவு பாதுகாப்பு துறை திடீர் உத்தரவு

சென்னை: ‘கடந்த ஆண்டு போல், தர்ப்பூசணி குறித்து விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு, இந்த ஆண்டு விவசாயிகள் பாதிக்கப்படும் சூழலை ஏற்படுத்தக் கூடாது’ என, உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் கோடை காலம் துவங்கி இருப்பதால், இளநீர், தர்ப்பூசணி என, உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய உணவுப் பொருட்களை, மக்கள் அதிகளவில் வாங்கி பயன்படுத்துகின்றனர்.

அதே நேரம், சில இடங்களில் பழங்களில் ரசாயனம் கலக்கப்படுவதால், மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு, தமிழக உணவு பாதுகாப்பு துறையின், சென்னை மாவட்ட நியமன அலுவலராக இருந்த சதீஷ்குமார், ஒரு வீடியோ வெளியிட்டார்.

அதில், ‘ரசாயனம் கலந்த தர்ப்பூசணி, அடர் சிவப்பிலும், ரசாயனம் கலக்காத தர்ப்பூசணி இளஞ்சிவப்பிலும் இருக்கும். பொதுமக்கள் விழிப்புணர்வுடன், தர்ப்பூசணியை வாங்கி சாப்பிட வேண்டும்.

குறிப்பாக, டிஷ்யூ பேப்பரை வைத்து, தர்ப்பூசணியை துடைத்தால், அதில் கலர் படிந்தால், அவை ரசாயன தர்ப்பூசணி’ என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வீடியோவால், தர்ப்பூசணி விற்பனை கடந்த ஆண்டு பாதிக்கப்பட்டது. குறிப்பாக, ஒரு டன், 14,000 ரூபாய் வரை விற்பனையான நிலையில், அந்த வீடியோவால், 3,000 ரூபாய் என, விலை சரிந்தது.

இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு எதிராக, போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோவிற்கு சதீஷ்குமார் மறுப்பு தெரிவித்தாலும், தர்ப்பூசணி விற்பனை அதிகரிக்கவில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டு, கோடைகாலம் துவங்கி, தர்ப்பூசணி விற்பனை நடந்து வரும் நிலையில், கடந்த ஆண்டுபோல், எந்தவொரு விழிப்புணர்வு வீடியோவையும் வெளியிடக்கூடாது என, உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:

வெயில் காலத்தில் தர்ப்பூசணி, உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய ஆரோக்கியமான உணவு.

கடந்த ஆண்டு ஒரு அதிகாரி வெளியிட்ட வீடியோவால், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்; அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும் வரும் காலங்களிலும், விவசாயிகள் பாதிக்கப்படக்கூடிய வீடியோக்களை வெளியிட வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தேர்தல் வருவதால், விழிப்புணர்வு மட்டுமின்றி, சோதனை செய்வதையும் குறைத்துக்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link