மெல்போர்ன்: கடலில் விழுந்து தத்தளித்த தன் தாய், தம்பி, தங்கையை காப்பாற்றுவதற்காக, 4 மணி நேரம் நீந்திச் சென்ற ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 13 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் மாகாணத்தில் உள்ளது குயின்டாலப் கடற்கரை. அங்கு ஜோவான் ஆப்பல்பீ, 47, என்ற பெண், ஆஸ்டின்,13, பியூ,12, கிரேஸ்,8, ஆகிய மூன்று குழந்தைகளுடன் விடுமுறையை கழிக்கச் சென்றுள்ளார்.
அப்போது அவர்கள், நீண்ட துடுப்புடன் கூடிய ‘பேடில் போர்டு’ எனப்படும் ஒருவித படகில் சென்று விளையாடியுள்ளனர். ஆனால் எதிர்பாராத விதமாக பயங்கர காற்று வீசியுள்ளது. இதனால் அனைவரும் பேடில் போர்டுடன் கரையில் இருந்து 4 கி.மீ., தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டனர். அத்துடன் பெரிய அலைகளும் எழுந்ததால் நான்கு பேரும் கடலில் விழுந்தனர்.
அப்போது செய்வதறியாது திகைத்த ஜோவான், தன் 13 வயது மகன் ஆஸ்டினிடம், கரைக்குச் சென்று யாரையாவது உதவிக்கு அழைக்குமாறு கூறியுள்ளார். தன் தாய், தம்பி, தங்கையை எப்படியாவது காப்பாற்றிவிடவேண்டும் என்று நினைத்த சிறுவன் ஆஸ்டின் நீந்த தொடங்கினார்.
முதல் இரண்டு மணி நேரம் லைப் ஜாக்கெட்டுடனும், பின்னர், தடையாக இருந்ததால் அதை கழற்றி வீசிவிட்டு, இரண்டு மணி நேரம் லைப் ஜாக்கெட் இல்லாமலும் கடும் அலைகளுக்கு நடுவே நீந்தியுள்ளார். மொத்தம் 4 மணி நேரம் நீந்தி கரையை அடைந்த சிறுவன், தாயின் கைப்பையில் இருந்த மொபைல்போனை எடுத்து, அவசர உதவி மையத்திற்க்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ஹெலிகாப்டர், படகுகள் மூலம் தேடுதல் வேட்டை நடந்துள்ளது. பின்னர் கரையிலிருந்து 14 கி.மீ தொலைவில், 10 மணி நேரம் கடலில் ஒரே பேடில் போர்டில் தொங்கிக் கொண்டிருந்த சிறுவனின் குடும்பத்தினர் மீட்கப்பட்டனர். அனைவரும் லைப் ஜாக்கெட் அணிந்திருந்ததால் உயிர் பிழைத்தனர்.
இந்த சிறுவனின் முயற்சியை ‘சூப்பர்ஹ்யூமன்’ என்று ஆஸ்திரேலிய மக்கள் பாராட்டி வருகின்றனர். நான் ஹீரோ இல்லை; நான் செய்ய வேண்டியதைச் செய்தேன், என்று சிறுவன் ஆஸ்டின் கூறியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
