ஈரான் கால்பந்து வீராங்கனைகள் தவிப்பு

கோலாலம்பூர்: ஆஸ்திரேலியாவில் தஞ்சம் அடைந்த 4 ஈரான் கால்பந்து வீராங்கனைகள் மலேசியா சென்றனர்.

ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. இதில் பங்கேற்ற ஈரான் அணியினர், தென் கொரியாவுக்கு எதிரான முதல் போட்டியில் தேசிய கீதம் பாட மறுத்து மவுனமாக நின்றனர்.

இதற்கு ஈரான் அரசு ‘டிவியில்’ எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் மீண்டும் நாடு திரும்பினால், தண்டிக்கப்படலாம் என்ற அச்சம் வீராங்கனைகளிடம் ஏற்பட்டது. தொடரின் முடிவில், ஆஸ்திரேலிய அரசு தஞ்சம் தர முன்வந்தது. இதை ஏற்ற 6 வீராங்கனைகள், 1 பயிற்சியாளர் என 7 பேர் ஆஸ்திரேலியாவில் தங்கினர். மற்றவர்கள் மலேசியா சென்றனர்.

ஆனால் தொடர்ந்து பல்வேறு தரப்பில் தரப்பட்ட நெருக்கடி காரணமாக, 4 வீராங்கனைகள் மனம் மாறினர். இவர்கள், ஆஸ்திரேலியாவில் இருந்து கிளம்பி, மலேசியாவில் உள்ள தங்களது அணியுடன் இணைந்தனர். வீராங்கனைகளின் இம்முடிவை ஈரான் அரசு நிர்வாகம் வரவேற்றுள்ளது.

தவிர மலேசியாவில் உள்ள ஈரானிய துாதரகத்தின் உதவியால், கால்பந்து அணியினர் அனைவரும், நேற்று ஓமனுக்கு கிளம்பினர்.

ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.எப்.சி.,) செயலர் விண்ட்சர் ஜான் கூறுகையில்,” ஈரான் கால்பந்து வீராங்கனைகள் ஓமனுக்கு செல்கின்றனர். அங்கிருந்து எங்கு செல்வர் எ ன தெரியாது. இருப்பினும் ‘பிபா’, ஏ.எப்.சி., அமைப்புகள், ஈரான் கால்பந்து அமைப்புடன் இணைந்து கண்காணிக்கும். ஏனெனில், அவர்களும் எங்கள் வீராங்கனைகள் தான்,” என்றார்.

Source link