மும்பை:ஐ.டி.பி.ஐ., வங்கியின் பெரும்பான்மை பங்குகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முயற்சி கைவிடப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வங்கியின் பங்குகளை வாங்க முன்வந்த நிறுவனங்கள், அரசு நிர்ணயம் செய்த அடிப்படை விலையை விட குறைந்த விலையை கேட்டிருப்பதே, இதற்கு காரணம் என தெரிகிறது.
இது குறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
ஐ.டி.பி.ஐ., வங்கியில் மத்திய அரசுக்கும், எல்.ஐ.சி., நிறுவனத்துக்கும் மொத்தம் 94.71 சதவீத பங்குகள் உள்ளன. இந்த நிலையில், அவ்வங்கியில் தங்கள் 60.72 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பதன் வாயிலாக, அதை முழுமையாக தனியார்மயமாக்க, கடந்த 2022 அக்., மாதம் முதல் அரசும், எல்.ஐ.சி., நிறுவனமும் முயற்சி செய்து வந்தன.
இதற்கான ஏலம் கடந்த பிப்., 6ம் தேதி அன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற நிறுவனங்கள் குறிப்பிட்டு இருந்த ஏல தொகை, நிதி அமைச்சகத்தின் செயலர்கள் அடங்கிய குழு நிர்ணயம் செய்த விலையை விட மிக குறைவாக உள்ளது. இதனால் பங்கு விற்பனை நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
