சி றிய தவறுகளுக்காக முதலீட்டு ஆலோசகர்கள் முடக்கப்படுவதை தவிர்த்து, குறைவான அபராத முறையை கொண்டு வருவது குறித்து திட்டமிட்டு வருவதாக செபி தலைவர் துஹின் காந்த பாண்டே தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
தற்போது நாட்டில், கிட்டத்தட்ட 1,000 பதிவு செய்யப்பட்ட முதலீட்டு ஆலோசகர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களில், 470 தனிநபர்களும், 530 நிறுவனங்களும் அடங்கும்.
நம் சந்தைக்கு அதிக ஒழுங்குபடுத்தப்பட்ட ஆலோசகர்கள் தேவை. இல்லையெனில், அந்த இடத்தை ‘பின்ப்ளூயன்சர்கள்’ போன்ற ஒழுங்குபடுத்தப்படாத நபர்கள் நிரப்பிவிடுவர். தற்போது, 62 சதவீத புதிய முதலீட்டாளர்கள், சமூக வலைதளங்களில் உள்ள பின்ப்ளூயன்சர்களால் கவரப்படுகின்றனர். அவர்கள் வெறும் கருத்துக்களை நிபுணத்துவம் போலவும், ஊகங்களை உத்திகள் போலவும் முன்வைக்கின்றனர். இது ஆபத்தானது.
எனவே, பதிவுசெய்யப்பட்ட ஆலோசகர் முறையை லாபகரமானதாகவும், தகுதியான நிபுணர்களுக்கு ஈர்ப்புடையதாகவும் மாற்றுவதே முக்கிய சவாலாக உள்ளது. முதலீட்டு ஆலோசகர்களுக்கு தேவையான அனைத்து வழிகாட்டுதல்களையும் ஒரே இடத்தில் வழங்க ‘செபி சேத்’ எனப்படும் டிஜிட்டல் தளம் உருவாக்கப்படும்; அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் பொதுவான விளம்பர குறியீடு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
