அமெரிக்காவின் 51வது மாகாணமாக வெனிசுலாவை மாற்ற டிரம்ப் விருப்பம்

வாஷிங்டன்: வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டை அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற்றுவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவிற்குள் அதிரடியாக நுழைந்த அமெரிக்க ராணுவம் அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோராவை கடந்த ஜன., 3ல் கைது செய்தது. போதைப்பொருள் பயங்கரவாத குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் இருவரும் அமெரிக்காவின் நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அந்நாட்டின் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராக உள்ளார். இந்நிலையில், சமூக வலைதள பதிவில், ‘வெனிசுலா ஒரு அற்புதமான நாடு. அங்கு மிகப்பெரிய அளவில் வளங்கள் உள்ளன. அதை நாம் சரியாக நிர்வகித்தால், அது அமெரிக்காவின் 51வது மாகாணமாக மிகச் சிறப்பாக இருக்கும்’ என, டிரம்ப் கூறியுள்ளார்.

ஏற்கனவே, வட அமெரிக்க நாடான கனடா, ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் நிர்வாகத்தின் கீழுள்ள உலகின் மிகப் பெரிய தீவு நாடான கிரீன்லாந்து ஆகியவற்றை, அமெரிக்காவின் மாகாணங்களாக இணைக்க வேண்டும் என்று டிரம்ப் கூறிவந்தார். தற்போது வெனிசுலாவையும் மாகாணமாக்க டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.

அடுத்தக் குறி கியூபா

வெனிசுலாவை மாகாணமாக்க வேண்டும் என்று கூறியுள்ள நிலையில், அடுத்ததாக வட அமெரிக்க நாடான கியூபாவுக்கு டிரம்ப் குறி வைத்துள்ளார். வெனிசுலாவில் இருந்து கியூபாவுக்கு கச்சா எண்ணெய் வழங்குவதை அமெரிக்க தடை செய்துள்ளது. இதனால், கடுமையான பொருளாதார நெருக்கடியுடன், மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாட்டு கியூபாவில் நிலவுகிறது. டிரம்ப் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ‘கியூபா ஒரு மிகப்பெரிய பேரழிவில் உள்ளது. அங்குள்ள மக்கள் கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். வெனிசுலாவில் நாம் மேற்கொண்ட நடவடிக்கையால், அந்நாடு தற்போது சிறப்பாக உள்ளது. அதேபோன்று, கியூபாவையும் நாம் மிக எளிதாக விடுவிக்க அல்லது நம் வசப்படுத்த முடியும்’ என, கூறியுள்ளார்.

நீடிக்கும் மின் வெட்டு!

கியூபாவின் எரிசக்தி மற்றும் பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்து வருவதன் காரணமாக அந்நாட்டின் மின் கட்டமைப்பு தொடர்ந்து சிதைந்து வருகிறது. இதையடுத்து, 1.10 கோடி மக்கள் வசிக்கும் கியூபா முழுதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு எரிசக்தி மற்றும் சுரங்கத்துறை அமைச்சகம், தன் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதைத் தவிர, எரிபொருள் இல்லாததால், பொதுபோக்குவரத்து உட்பட அனைத்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயம், மருத்துவ சேவைகள் உட்பட பலவும் முடங்கியுள்ளன.ல மக்கள் விறகு மற்றும் நிலக்கரியை பயன்படுத்தி சமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளனர். நாடு முழுதும் பல பகுதிகளில் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வரை மின் வெட்டு அமலில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

Source link