டெஹ்ரான்: எங்களின் கார்க் தீவை அமெரிக்கா தாக்கினால், எங்கிருந்து தாக்கப்பட்டதோ அந்த இடம் பஸ்பமாகிவிடும் வகையில் பதிலடி கொடுப்போம் என, ஈரான் தெரிவித்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் மீது கடந்த மாதம் 28ம் தேதி அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து போர் தொடுத்தன. தொடர்ந்து 18வது நாளாக இரு தரப்பும் மாறி மாறி தாக்கிக் கொண்டன.இதன் ஒருபகுதியாக, ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு மீது அமெரிக்கா, கடந்த 13ம் தேதி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.
அத்தீவில் உள்ள முக்கிய ராணுவ கட்டமைப்புகள் முழுதும் அழிக்கப்பட்டுவிட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், மனிதாபிமான அடிப்படையில், அங்குள்ள எண்ணெய் கிணறுகள் மற்றும் சேமிப்பு மையங்கள் மீது தாக்குதல் நடத்துவதை தவிர்த்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை தொடர்ந்து ஈரான் முடக்கினால், கார்க் தீவில் உள்ள எண்ணெய் கிணறுகள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்றும், அதை ஜாலிக்காக கூட செய்வோம் எனவும், டிரம்ப் கூறியிருந்தார்.
டிரம்பின் கருத்துக்கு பதிலளித்து, ஈரான் ஆயுதப்படை செய்தி தொடர்பாளர் ஷெகர்ச்சி கூறியுள்ளதாவது: ஈரானின் எண்ணெய் அல்லது எரிசக்தி துறை மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு நிச்சயமான மற்றும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும். ஈரானின் கார்க் தீவு மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், அதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும். அது மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும்.
அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் அல்லது அமெரிக்க முதலீடு கொண்ட, மேற்காசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம். எங்கள் மீது எந்த இடத்தில் இருந்து தாக்குதல் நடத்தப்படுகிறதோ, அந்த இடம் பஸ்பமாக்கி விடுவோம். அந்த நாட்டில் உள்ள அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்களும் தாக்கப்படும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற அண்டை நாடுகளும், அமெரிக்காவை தங்கள் மண்ணில் இருந்து ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு அனுமதித்தால், அந்நாடுகளின் எரிசக்தித் துறையும் இலக்காக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
