மதுரை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதாவின் காரில் நகை திருடுபோன விவகாரத்தில் காவலாளி அஜித்குமார் போலீஸ் காவலில் மரணமடைந்த வழக்கில் 4 போலீசார் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
‘நகை திருட்டு எதுவும் நடக்கவில்லை. நிகிதாவின் புகாரில் முகாந்திரம் இல்லை என்பதால் அது தொடர்பான வழக்கு முடித்து வைக்கப்பட்டது,’ என சி.பி.ஐ.,தரப்பில் தெரிவிக்கப்பட்டது. போலீசாருக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். தவறு செய்தவர்கள் தொடர்ந்து சிறையில் இருக்கட்டும்’ என்று நீதிபதி எஸ்.ஸ்ரீமதி தெரிவித்தார்.
காவலில் வைத்திருக்க முடியாது காரிலிருந்த நகை திருடு போனதாக நிகிதா திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். கோயில் காவலாளியாக இருந்த அஜித்குமாரை 2025 ஜூன் 27 ல் போலீசார் விசாரித்தனர். தனிப்படை போலீசார் தாக்கியதில் அவர் இறந்தார். இவ்வழக்கை சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன், போலீஸ் வேன் டிரைவர் ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டனர். விசாரணை மதுரை 5 வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடக்கிறது. வழக்கில் மானாமதுரை டி.எஸ்.பி.,சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சிறப்பு எஸ்.ஐ.,சிவக்குமார், ஏட்டு இளையராஜா கூடுதல் எதிரிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஜன.7 ல் டி.எஸ்.பி.,சண்முகசுந்தரத்தின் முன்ஜாமின் மனுவை வாபஸ் பெற்றதால் உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.
சங்கரமணிகண்டன், ஆனந்த், ராஜா, பிரபு உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: சம்பவத்தில் எங்களுக்கு தொடர்பு இல்லை. ஆதாரம் இன்றி வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளோம். கைது செய்ததற்கான காரணங்களை குறிப்பிடவில்லை. ‘காலவரையின்றி காவலில் வைத்திருக்க முடியாது,’ என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை 1 முதல் காவலில் உள்ளோம். விசாரணை முடிந்து, கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜாமின் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.
அஜித்குமாரின் தாய் மாலதி,’ஜாமின் அனுமதிக்கக்கூடாது,’ என ஆட்சேபித்து இடையீட்டு மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார்.
சி.பி.ஐ.,தரப்பு வழக்கறிஞர் முகைதீன் பாஷா: போலீஸ் காவலில் அஜித்குமார் மரணமடைந்த வழக்கில் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போலீஸ் காவலில் மரணம் நிகழ்ந்தது உறுதியாகியுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட போலீஸ் ↔ தொடர்ச்சி கடைசி பக்கம் அதிகாரிகள் உள்ளிட்ட 10 போலீசாருக்கும் தொடர்புள்ளது. நகை திருட்டு குறித்து நிகிதா அளித்த புகார் விசாரிக்கப்பட்டது. நகை திருட்டு எதுவும் நடக்கவில்லை. புகாரில் முகாந்திரம் இல்லை என்பதால் அது தொடர்பான வழக்கை முடித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்விரோதம் காரணமா நீதிபதி: அப்படி எனில் நிகிதா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பவத்திற்கு முன்விரோதம் எதுவும் காரணமா.
முகைதீன் பாஷா: முன்விரோதம் எதுவும் இல்லை. சம்பந்தப்பட்ட போலீசார் வரம்பு மீறி செயல்பட்டுள்ளனர்.
நீதிபதி: நகை திருட்டு புகார் மீதான விசாரணை எதற்காக முடித்து வைக்கப்பட்டது.
முகைதீன்பாஷா: விசாரணை அதிகாரியிடம் விபரம் பெற வேண்டும். பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை.
நீதிபதி: ஒன்றுமில்லாத காரணத்திற்காக ஒரு அப்பாவியை இப்படி தாக்கி கொலை செய்துள்ளனர். மனம் பதைபதைக்கிறது. போலீசாருக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். தவறு செய்தவர்கள் தொடர்ந்து சிறையில் இருக்கட்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது. சி.பி.ஐ.,தரப்பில் பதில் மனு தாக்கல் செய்வதற்காக விசாரணையை நீதிபதி பிப்.16 க்கு ஒத்திவைத்தார்.
