மதுரை : ‘நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதில் ‘ஈகோ’ பார்க்கக் கூடாது’ என, கருத்து தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, ‘திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில், மனுதாரர் ராமரவிக்குமார் தரப்பில் தீபம் ஏற்ற போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தனர்.
மதுரை மாவட்டம், எழுமலை ராம ரவிக்குமார் உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த மனு அடிப்படையில், 2025 டிச., 1ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘வழக்கமான இடங்களைத் தவிர, திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்’ என, உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை நிறைவேற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ‘தீபத்துாணில் ராமரவிக்குமார் தரப்பில் தீபம் ஏற்ற போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என, டிச., 4ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.இதை எதிர்த்து, கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தனர். இது ஏற்கனவே நிலுவையில் உள்ளது.
மார்ச் 4ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘நீதிமன்றம் நியமிக்கும் ஐவர் குழுவை, தீபத்துாண் அமைந்துள்ள மலை உச்சிக்கு சென்று, 15 நிமிடம் அடையாள வழிபாடு நடத்த அனுமதிக்கலாம் என பரிந்துரைக்கிறேன். மார்ச் 18ல் போலீஸ் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர் இனிகோ திவ்யன் தகுந்த பதில் அளிக்காவிடில், அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும். அவர்கள் ஆஜராக வேண்டும்’ என, உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர், கோவிலின் தற்போதைய செயல் அலுவலர் ஞானசேகரன் மேல்முறையீடு செய்தனர். இம்மனு நிலைக்கத்தக்கது தானா என்பதை முடிவு செய்ய, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.அத்துடன் ஏற்கனவே நிலுவையிலுள்ள மனுக்களுடன் சேர்த்து நீதிபதிகள் விசாரித்தனர்.
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் ரவீந்திரன், வீராகதிரவன், மூத்த வழக்கறிஞர் இளங்கோ வாதம்:தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என முதலில் தனி நீதிபதி உத்தரவிட்டார். இதற்கு எதிரான மேல்முறையீட்டில், ‘வரும் கார்த்திகை தீப திருவிழாவின் போது கோவில் நிர்வாகம் தன் குழுவின் மூலம் தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும்’ என, இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.
இதற்கு மாறாக தற்போது தனி நீதிபதி, ‘ஐவர் குழுவை தீபத்துாண் அமைந்துள்ள மலை உச்சிக்கு சென்று வழிபாடு நடத்த அனுமதிக்கலாம்’ என்கிறார். அவ்வாறு புதிதாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. இரு நீதிபதிகள் அமர்வின் உத்தரவை, தனி நீதிபதி மாற்றியமைத்துள்ளார். இது நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் வரம்பிற்கு அப்பாற்பட்டது. இரு நீதிபதிகள் அமர்வு முடிவு செய்த பின் தனி நீதிபதி விசாரிப்பது ஏற்புடையதல்ல.இவ்வாறு வாதிட்டார்.
ராமரவிக்குமார் தரப்பு வழக்கறிஞர் அருண்சுவாமிநாதன் வாதம்: நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தக்கூடாது என்ற நோக்கில், ஒவ்வொரு முறையும் அரசு தரப்பில் தந்திரத்தை கையாள்கின்றனர். கால அவகாசம் கோருகின்றனர். கலெக்டரின் தடை உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்த பின்னும், போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக கூறி, இந்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல், உள்நோக்குடன் அரசு தரப்பு செயல்படுகிறது.இவ்வாறு வாதிட்டார்.
நீதிபதிகள், ‘இது ஒரு சிறு பிரச்னை. ஐந்து பேரை வழிபட அனுமதிக்க தனி நீதிபதி பரிந்துரை தான் செய்துள்ளார். அதில் என்ன தவறு உள்ளது. அந்த உத்தரவை நிறைவேற்றுவதில், ‘ஈகோ’ பார்க்கக்கூடாது; பிடிவாதம் கூடாது. இதில், யாரையும் நாங்கள் குறிப்பிட்டு சொல்லவில்லை. இல்லையெனில் கோவில் பணியாளர்களை நீங்களே நியமித்து வழிபட அனுமதிக்கலாமே. நீதிமன்றத்திற்கு பல்வேறு பணிகள் உள்ளன. சிறு பிரச்னைக்கு எத்தனை வழக்குகள் தான் தாக்கல் செய்வீர்கள். இதனால் நீதிமன்றத்தின் நேரம் தான் வீணாகிறது. இவ்வாறு தெரிவித்தனர்.
பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தீபத்துாணில் ராமரவிக்குமார் தரப்பில் தீபம் ஏற்ற போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. ஐந்து பேர் கொண்ட குழுவை வழிபாடு நடத்த அனுமதிக்கலாம் என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக தாக்கலான மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்கப்படுகிறது. அதற்கு பிரதான எண்ணை பதிவுத்துறை வழங்க வேண்டும். விசாரணை ஏப்., 8க்கு ஒத்தி வைக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்டனர்.
