– டில்லி சிறப்பு நிருபர் –
‘பிறந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆன குழந்தையை தத்தெடுக்கும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு மறுப்பது சட்ட விரோதம். அவர்களுக்கும் கட்டாயம் விடுப்பு வழங்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
மகப்பேறு நலச்சட்டத்தின் கீழ், மூன்று மாதங்களுக்கு உட்பட்ட குழந்தையை தத்தெடுத்தால் மட்டுமே, பெண்களுக்கு, 12 வார கால மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு மேல் இருந்தால், விடுப்பு இல்லை. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விரிவாக விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு, ஜனவரியில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது.
இந்த வழக்கில், அளிக்கப்பட்ட தீர்ப்பு: குடும்பம் என்பது வெறும் உயிரியல் ரீதியான பிணைப்புகளால் மட்டுமே உருவாவதல்ல. தத்தெடுப்பு என்பது ஒரு குடும்பத்தை உருவாக்குவதற்கான சமமான மற்றும் செல்லுபடியாகும் வழி. குழந்தையை வளர்ப்பதில் உள்ள பொறுப்புகளும், அதனுடன் ஏற்படும் உணர்வுப்பூர்வமான பிணைப்பும், தத்தெடுக்கும் போது குழந்தையின் வயது என்னவாக இருந்தாலும் மாறாது.
இந்த அடிப்படையில் மகப்பேறு பலன்களை மறுப்பது, பராமரிப்புத் தேவைகளையும், தாய்- – சேய் இடையேயான உறவையும் புறக்கணிப்பதாகும். எனவே, பிறந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆன குழந்தையை தத்தெடுக்கும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு மறுப்பது சட்ட விரோதம்.அது தொடர்பான விதி ரத்து செய்யப்படுகிறது. இனி, தத்தெடுக்கப்படும் குழந்தையின் வயது எதுவாக இருந்தாலும், பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்படும். இவ்வாறு அமர்வு தீர்ப்பளித்தது.
இதற்கிடையே, தாய்மார்களை போல, குழந்தை பராமரிப்பில் தந்தையருக்கும் சமமான பங்கு உண்டு என்பதை அங்கீகரிக்கும் வகையில், ‘தந்தை வழி மகப்பேறு விடுப்பு’ சட்டத்தை இயற்றுவது குறித்து பரிசீலிக்கும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
