அரையிறுதியில் தமிழக பெண்கள் * 151 ரன் விளாசினார் கமலினி

ராஞ்சி: ‘ஒன் டே’ டிராபி தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியது தமிழக பெண்கள் அணி. நேற்று நடந்த காலிறுதியில் கமலினி 151 ரன் விளாச, ‘வி.ஜே.டி.,’ விதிப்படி 6 விக்கெட் வித்தியாசத்தில் டில்லியை வென்றது.

இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் 23 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான ‘ஒன் டே’ டிராபி எலைட் தொடர் நடத்தப்படுகிறது. நேற்று காலிறுதி போட்டிகள் துவங்கின. ராஞ்சியில் நடந்த போட்டியில் தமிழகம், டில்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ‘டாஸ்’ வென்ற தமிழக அணி, பீல்டிங் தேர்வு செய்தது.

டில்லி அணிக்கு தீக் ஷா, உபாசனா ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 91 ரன் சேர்த்த போது, உபாசனா (45) அவுட்டானார். தீக் ஷா 64 ரன் எடுத்தார். ஷ்வேதா 23, வன்ஷிகா 27 ரன் எடுக்க, கேப்டன் தனிஷா அரைசதம் அடித்தார். டில்லி அணி 50 ஓவரில் 288/5 ரன் எடுத்தது. தனிஷா (92) அவுட்டாகாமல் இருந்தார். தமிழகம் சார்பில் ஜெனிதா, ஐஸ்வர்யா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

கமலினி கலக்கல்

தமிழக அணிக்கு சுபாஹரிணி (7), ரினாஸ் (12) ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது. கேப்டன் ரோஷினி (2) கைவிட, 60/3 ரன் என திணறியது தமிழகம். மறுபக்கம் கமலினி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். ஐஸ்வர்யா (20) நிலைக்கவில்லை. நேஹா சற்று கைகொடுக்க, கமலினி சதம் விளாசினார்.

பின் போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி தடை பட்டது. மீண்டும் ஆட்டம் துவங்கியதும், கமலினி 150 ரன்களை கடந்தார். உள்ளூர் ‘வி.ஜே.டி.,’ விதிப்படி, தமிழக அணி 42.1 ஓவரில் 255/4 ரன் எடுத்து, வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது. கமலினி (151 ரன், 118 பந்து, 9 பவுண்டரி, 7 சிக்சர்), நேஹா (49) அவுட்டாகாமல் இருந்தனர்.

Source link