மெக்சிகோவுக்கு மாற்ற வேண்டும் * ஈரான் அணி வேண்டுகோள்

மெக்சிகோ சிட்டி: ‘உலக கோப்பை கால்பந்து தொடரில் எங்கள் போட்டிகளை அமெரிக்காவில் இருந்து மெக்சிகோவுக்கு மாற்ற வேண்டும்,” என ஈரான் வேண்டுகோள் விடுத்துள்ளது.

‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில், வரும் ஜூன் 11-ஜூலை 19ல் நடக்க உள்ளது. 48 அணிகள் பங்கேற்க உள்ளன. ஆசியாவின் பலம் வாய்ந்த, சர்வதேச தரவரிசையில் 20 வது இடத்திலுள்ள ஈரான் அணி ‘ஜி’ பிரிவில் உள்ளது. நியூசிலாந்து (ஜூன் 15), பெல்ஜியம் (21), எகிப்துடன் (26), ஈரான் மோத உள்ள போட்டிகள் அமெரிக்காவில் நடக்க உள்ளன.

ஆனால், தற்போது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்துள்ளது. இதனால், ‘அமெரிக்க மண்ணில் ஈரான் அணி வீரர்கள் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தர முடியாது,’ என, அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

இதையடுத்து தங்களது போட்டிகளை அமெரிக்காவில் இருந்து, மெக்சிகோவுக்கு மாற்ற வேண்டும் என ஈரான் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரான் கால்பந்து கூட்டமைப்பு தலைவர் மெஹிதி தாஜ் கூறுகையில்,”ஈரான் அணியினருக்கு பாதுகாப்பு தர முடியாது என, டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாங்கள் அமெரிக்காவுக்கு செல்ல முடியாது. இதனால் எங்களது போட்டிகளை இடமாற்றம் செய்வது தொடர்பாக, சர்வதேச கால்பந்து அமைப்பிடம் (‘பிபா’) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்,” என்றார்.

Source link