– நமது டில்லி நிருபர் – பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வின் போது, லோக்சபாவில் கடும் அமளியில் ஈடுபட்டு

– நமது டில்லி நிருபர் –

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வின் போது, லோக்சபாவில் கடும் அமளியில் ஈடுபட்டு ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.,க்கள் மீதான நடவடிக்கை நேற்று ரத்து செய்யப்பட்டது.

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வின்போது, லோக்சபாவில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக, காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிகளை சேர்ந்த 8 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

வலியுறுத்தல்

இந்த நடவடிக்கையை திரும்ப பெற வேண்டுமென்று பல்வேறு கட்சி எம்.பி.,க்களும் சபாநாயகரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்வது குறித்து பிரிசீலிப்பதாக, சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.,க்களுடன் சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அப்போது சபையின் மையப்பகுதிக்குச் சென்று அமளியில் ஈடுபடுவதோ, சபாநாயகர் இருக்கையை நோக்கி காகிதங்களை வீசவோ கூடாது என, அறிவுறுத்தப்பட்டது. இவை அனைத்தையும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் ஏற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், நேற்றைய கேள்வி நேரம் முடிந்து பூஜ்ஜிய நேரம் துவங்கியதும், ”சில எம்.பி.,க்கள் தங்களையும் அறியாமல் செய்துவிட்ட தவறுகளுக்கு வருந்துகிறோம். ”எனவே, சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும்,” என, காங்., மூத்த எம்.பி., கொடிக்குன்னில் சுரேஷ் கேட்டுக் கொண்டார்.

இதை தொடர்ந்து, 8 எம்.பி.,க்களின் சஸ்பெண்டை ரத்து செய்வதற்காக, லோக்சபா சட்டப்பிரிவு 370-ஐ நிறைவேற்றும் தீர்மானத்தை, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு முன்மொழிந்தார்.

அதன் பின் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, ”சபைக்குள், போஸ்டர்கள், பேனர்கள் மற்றும் புகைப்படங்களைக் காட்சிப்படுத்துவது கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட படங்களையும், சபையிலோ அல்லது பார்லிமென்ட் வளாகத்திலோ காட்டக்கூடாது,” என, எச்சரிக்கை விடுத்தார்.

தீர்மானம்

இறுதியாக குரல் ஓட்டெடுப்பு வாயிலாக, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 8 எம்.பி.,க்களின் சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ் எம். பி.,க்களான, குர்ஜீத் சிங் அஜ்லா, ஹிபி ஈடன், கிரண் குமார் ரெட்டி, அமரிந்தர் சிங் ராஜா வாரிங், மாணிக்கம் தாகூர், பிரசாந்த் படோலே, டீன் குரியாகோஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ., எம்.பி.,யான வெங்கடேசன் ஆகிய 8 பேரும் சஸ்பெண்ட் நடவடிக்கையில் இருந்து தப்பினர்.

Source link