குஜராத் துறைமுகம் வந்தது இரண்டாவது எரிவாயு கப்பல்

ஆமதாபாத்: இந்திய கப்பல் கழகத்துக்கு சொந்தமான, ‘நந்தா தேவி’ கப்பல், 45,000 டன் எரிவாயுவுடன் ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து, குஜராத்தின் வாடிநார் துறைமுகத்துக்கு நேற்று வந்தது.

மேற்கு ஆசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. பதிலுக்கு ஈரான் சர்வதேச கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு செல்லும் கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியுள்ளது. அவ்வழியாக பயணிக்கும் கப்பல்களை தாக்குவோம் என எச்சரித்து உள்ளது.

இது சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வழி வகுத்தது. சமையல் எரிவாயு வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசு ஈரானுடன் நடத்திய பேச்சு காரணமாக இந்திய கப்பல்கள் செல்ல அனுமதி வழங்கினர். சமீபத்தில், ‘ஷிவாலிக்’ என்ற இந்திய கப்பல், 45,000 டன் சமையல் எரிவாயுவுடன் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை அடைந்தது.

இந்நிலையில், ‘நந்தா தேவி’ கப்பல் 45,000 டன் எரிவாயுவுடன் குஜராத்தின் வாடிநார் துறைமுகத்துக்கு நேற்று வந்தது. முதலில் குஜராத்தின் கண்ட்லா துறைமுகத்துக்கு செல்லும் பயணம் திட்டத்தில் இருந்தது. அதன் பின் வாடிநாருக்கு மாற்றப்பட்டது.

இந்த இரு கப்பல்களும், பொதுத்துறை நிறுவனமான இந்திய கப்பல் கழகத்துக்கு சொந்தமானவை. மேலும், ‘ஜாக் லாட்கி’ என்ற கப்பல், ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து 81,000 டன் கச்சா எண்ணெயுடன் முந்த்ரா துறைமுகத்தை நோக்கி வருகிறது. கப்பலும், அதில் உள்ள பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source link