ராஜ்யசபா தேர்தல்: ஒடிஷாவில் பா.ஜ., ஆதரவு வேட்பாளருக்கு ஓட்டளித்த 3 காங்., – எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட்

புவனேஸ்வர்: ஒடிஷாவில் நடந்த ராஜ்யசபா தேர்தலில், பா.ஜ., ஆதரவு வேட்பாளருக்கு ஓட்டளித்த புகாரில், காங்., – எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ் ஜெனா, சோபியா பிர்தவுஸ், தசரதி காமாங் ஆகியோரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து, அக்கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

கடும் போட்டி

நாடு முழுதும், 10 மாநிலங்களில் காலியான, 37 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப் பட்டது. இதில், தமிழகத்தில் ஆறு இடங்கள் உட்பட, 26 இடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். எஞ்சிய, 11 இடங்களுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது.

இதன்படி, ஒடிஷாவில் நான்கு; பீஹாரில் ஐந்து; ஹரியானாவில் இரண்டு இடங்களுக்கு தேர்தல் நடந்தது. பீஹாரில், ஐந்து இடங்களையும் ஆளும் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி கைப்பற்றியது. ஹரியானாவில், பா.ஜ., – காங்., தலா ஒரு இடங்களை கைப்பற்றின.

ஒடிஷாவில், நான்கு இடங்களுக்கு ஐந்து வேட்பாளர்கள் போட்டியிட்டதால், தேர்தல் களம் சூடுபிடித்தது. இரு இடங்களில் பா.ஜ., வெற்றியும், ஒரு இடத்தில் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளத்தின் வெற்றியும் உறுதியான நிலையில், நான்காவது இடத்துக்கு, பா.ஜ., ஆதரவு சுயேச்சை வேட்பாளர் திலீப் ராய் – பிஜு ஜனதா தள வேட்பாளர் தத்தேஸ்வர் ஹோட்டா இடையே கடும் போட்டி நிலவியது.

திலீப் ராய் வெற்றிக்கு கூடுதலாக எட்டு ஓட்டுகள் தேவைப்பட்ட நிலையில், தத்தேஸ்வர் ஹோட்டாவுக்கு, 12 ஓட்டுகள் தேவைப்பட்டன. காங்கிரசின், 14 எம்.எல்.ஏ.,க்கள் தத்தேஸ்வர் ஹோட்டாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் அவர் வெற்றி பெறுவார் என, எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், திடீர் திருப்பமாக, பா.ஜ., ஆதரவு வேட்பாளர் திலீப் ராய் வெற்றி பெற்றார். அவருக்கு, பிஜு ஜனதா தளத்தின் எட்டு எம்.எல்.ஏ.,க்கள், காங்கிரசின் மூன்று எம்.எல்.ஏ-.,க்கள், கட்சி மாறி ஓட்டளித்துள்ளனர்.

சஸ்பெண்ட்

ஒடி ஷாவின் நான்கு இடங்களில், பா.ஜ., வேட்பாளர்கள் மன்மோகன் சமல், சுஜீத் குமார்; ஒரு இடத்தில் பிஜு ஜனதா தளத்தின் சந்த்ருப்த் மிஸ்ரா; மற்றொரு இடத்தில் தீலிப் ராய் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில், ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ., வேட்பாளருக்கு கட்சி மாறி ஓட்டளித்த புகாரில், ஒடிஷா காங்., – எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ் ஜெனா, சோபியா பிர்தவுஸ், தசரதி காமாங் ஆகியோரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து, அக்கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி, கட்டாக் நகர காங்., தலைவர் கிரிபாலா பெஹேராவும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஹரியானாவில் விடிய விடிய ஓட்டு எண்ணிக்கை

ஹரியானாவில் இரு ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடந்தது. இதில், பா.ஜ., சார்பில் சஞ்சய் பாத்தியா, காங்., சார்பில் கரம்வீர் சிங் பவுத், பா.ஜ., ஆதரவு சுயேச்சை வேட்பாளார் சதீஷ் நந்தல் ஆகியோர் போட்டியிட்டனர். இரு இடங்களுக்கு மூன்று பேர் போட்டியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தலில், ரகசிய ஓட்டெடுப்பு விதிகளை மீறியதாக இரு கட்சிகளும் புகார் அளித்ததால், காங்கிரசின் நான்கு ஓட்டுகள், பா.ஜ.,வின் ஒரு ஓட்டு என, மொத்தம் ஐந்து ஓட்டுகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. தொடர்ந்து, நள்ளிரவை தாண்டி ஓட்டு எண்ணிக்கை விடிய விடிய நடந்தது.
இறுதியில், பா.ஜ.,வின் சஞ்சய் பாத்தியா, காங்கிரசின் கரம்வீர் சிங் பவுத் ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. காங்., – எம்.எல்.ஏ-.,க்கள் ஐந்து பேர் கட்சி மாறி ஓட்டளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பா.ஜ., ஆதரவு வேட்பாளர் சதீஷ் நந்தல், 16 ஓட்டுகளை பெற்றார். கூடுதலாக, காங்கிரசின் ஒரு எம்.எல்.ஏ., கட்சி மாறி ஓட்டளித்திருந்தால் கூ ட, முடிவுகள் மாறியிருக்கும் என, கூறப்படுகிறது .

Source link