கொடைக்கானல்: தேர்தல் நடத்தை விதிகள் குறித்து சரியான புரிதல் இல்லாமல், கொடைக்கானல், குறிஞ்சி ஆண்டவர் கோவிலில், கந்த சஷ்டி கவசம் கல்வெட்டை, அறநிலையத்துறை, காகிதம் ஒட்டி மறைத்த கேலிக்கூத்து நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலின் உப கோவிலான கொடைக்கானல், குறிஞ்சி ஆண்டவர் கோவிலில், கந்த சஷ்டி கவச வரிகள் கொண்ட கல்வெட்டு உள்ளது. இதன் கீழ், உபயதாரர் பெயர் பொறிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், அறநிலையத்துறை உத்தரவுபடி, பணியாளர்கள், மொத்த கல்வெட்டையும் காகிதம் ஒட்டி மறைத்தனர். கோவில் திருப்பணி உபயதாரர்களின் பெயர்களும் மறைக்கப்பட்டன.
இதுகுறித்து ஹிந்து முன்னணி, பா.ஜ.,வினர் கோவில் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினர். கல்வெட்டை மறைக்க பயன்படுத்திய பேப்பர் அகற்றப்பட்டது.
கோவில் கண்காணிப்பாளர் சத்யநாராயணன் கூறுகையில், ”உபயதாரர்கள் பெயரை மறைக்க உத்தரவிடப்பட்டது. தவறுதலாக மொத்த கல்வெட்டும் மறைக்கப்பட்டுவிட்டது. உடனடியாக அகற்றி விட்டோம்,” என்றார்.
உபயதாரர்கள், அரசியல் பிரமுகர்களாக இருந்தால் மட்டுமே மறைக்கப்பட வேண்டும். தனி நபர்கள், தனியார் நிறுவனங்கள் என்றால் மறைக்கப்பட வேண்டியதில்லை. அப்படியே இருந்தாலும், அவர்கள் பெயர் தான் மறைக்கப்பட வேண்டுமே தவிர, மொத்த கல்வெட்டும் மறைக்கப்பட வேண்டியதில்லை. இந்த புரிதல் கூட இல்லாமல், அறநிலையத்துறை, இத்தகைய நடவடிக்கையில் இறங்கி, பக்தர்களை வருந்த செய்துள்ளது.
