கடைசி நாளில் 20 அரசாணைகள்; வீட்டுவசதி துறையில் நிறுத்தி வைப்பு

சென்னை : வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையில், தேர்தல் அறிவிப்புக்கு முந்தைய நாளில் தயாரான, 20க்கும் மேற்பட்ட அரசாணைகளை வெளியிட, உயர் அதிகாரி தயங்குவதால், அவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் கீழ், வீட்டுவசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., ஆகியவை உள்ளன. இத்துறைகள் தொடர்பான, புதிய முடிவுகள் எதுவானாலும், அதற்கு வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சி துறை வாயிலாக, அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, நிலுவையில் உள்ள கோப்புகள் குறித்த அரசாணைகளை வெளியிட, அந்தந்த துறை அமைச்சர்கள் உத்தரவிட்டனர்.

இதன்படி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையில், கடந்த ஒரு வாரமாக, அதிகாரிகள் இரவு வரை வேலை பார்த்தனர். இதன் பயனாக, 20க்கும் மேற்பட்ட அரசாணைகள் தயாராகின. அமைச்சர் அனுமதி, வரிசை எண் ஒதுக்கும் பணிகள் முடிந்த நிலையில், மார்ச்,15 தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

இந்நிலையில், கட்டட அனுமதி, புதிய பணியிட அனுமதி, பணி நியமனம் போன்ற விஷயங்கள் தொடர்பான அரசாணைகளை வெளியிட, துறை உயர் அதிகாரி தயங்கி உள்ளார். இதன் காரணமாக, அந்த அரசாணைகள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.

இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: முந்தைய ஆட்சி காலங்களில், இது போன்று, தேர்தல் தேதி அறிவிக்கும் சமயத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளால், வீட்டுவசதி துறையில், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. சில நிகழ்வுகளில் அதிகாரிகள் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளனர். இதனால், தற்போதுள்ள அரசு செயலர், அரசாணைகளை வெளியிட விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Source link